ஒரு வீடு என இருந்தால், அதில் சமையலறை என்பதும் கண்டிப்பாக இருக்கும். அந்த சமையலறை என்பது மிக மிக முக்கியமான ஒரு அறையாகும். சமையலறை என்பது லட்சுமி வாசம் செய்யக்கூடிய ஒரு இடமாகவும் கருதப்படுகிறது. எனவே அந்த அறையை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
எந்த ஒரு வீட்டில் உள்ள அடுப்பின் பர்னரை குறைவாக வைத்தால் எரிகிறதோ, அந்த வீட்டில் பணத்தட்டுப்பாடு இல்லை என்று அர்த்தம். ஒரு சில வீடுகளில் உள்ள அடுப்பின் பர்னரை குறைவாக வைத்தால் அணைந்து விடும், அவ்வாறு வைத்திருக்கக் கூடாது. அடுப்பை சரியாக பராமரித்து வைத்திருக்க வேண்டும்.
அடுப்பின் வலது புறம் கல் உப்பை வைத்துக் கொள்ளலாம். ஆனால் இந்த உப்பிற்கு பக்கத்தில் எண்ணெயை வைக்கக் கூடாது. ஏனென்றால் எண்ணெய் என்பது சனி பகவான் கல் உப்பு என்பது சந்திர பகவான். சந்திரனுடன் சனிபகவான் சேர்ந்தால் அந்த வீடுகளில் நல்ல காரியம் நடப்பதில் தடைகள் ஏற்படும்.
அதேபோன்று அடுப்பிற்கு கீழே குப்பை கூழங்கள், குப்பை தொட்டிகள் போன்றவற்றை வைக்கக் கூடாது. அவ்வாறு வைத்தால் அந்த வீட்டில் ஏதேனும் ஒரு துன்பங்கள் வந்து கொண்டே இருக்கும். அடுப்பிற்கு கீழே தண்ணீர் குடங்களையும் வைக்கக் கூடாது.
சமையலறையில் உள்ள மசாலா டப்பாக்களில் உள்ள பொருட்களை குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வப்போது குறைந்த அளவிலாவது மசாலா பொருட்களை வாங்கி டப்பாக்களில் நிரப்பி வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் காலி டப்பாக்களை சமையலறையில் வைத்தால் பணவரவு குறையும்.
அரிசி மூட்டையாகவோ, சிப்பமாகவோ எடுக்கும் பொழுது அதனை ஒரு டப்பாவில் கொட்டி வைத்து தான் பயன்படுத்த வேண்டும். அந்த மூட்டைகளில் இருந்து அப்படியே எடுத்து பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் மன கஷ்டம், பண கஷ்டம் போன்ற பிரச்சினைகள் உண்டாகும்.
அடுப்பிற்கு வலது பக்கத்தில் கருவாட்டினை வைக்க கூடாது. ஒரு சிலர் மொத்தமாக வாங்கி ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்வார்கள். அவ்வாறு வைக்கும் டப்பாவை அடுப்பின் வலது பக்கத்தில் வைக்கக் கூடாது. அதற்கு பதிலாக வேறு இடங்களில் வைத்துக் கொள்ளலாம்.
அடுப்பிற்கு சிறிது தூரத்தில் தள்ளி, இரண்டு அல்லது மூன்று பாத்திரங்களில் தண்ணீர் நிரப்பி வைத்துக் கொள்வது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. மேலும் பண வரவிற்கு எந்த ஒரு தடையும் ஏற்படாது.
சமையலறை என்பதில் அக்னி பகவான் மற்றும் அனைத்து விதமான தேவதைகளும் இருப்பார்கள். எனவே சமையலறையை எப்பொழுதும் சுத்தமாகவும், நறுமணத்துடனும் வைத்துக் கொள்ள வேண்டும்.