தேவையில்லாமல் முடிச்சுப் போட வேண்டாம்! அமைச்சர் கடம்பூர் ராஜு பதில்!

Photo of author

By Sakthi

ஜெயலலிதாவின் நினைவிடம் திறக்கப்பட்டது சசிகலா விடுதலை செய்யப்பட்டதற்கு முடிச்சுப் போட்டு பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது என்று மதுரையிலே அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்திருக்கிறார். மன்னர் திருமலை நாயக்கரின் 438வது பிறந்த தினத்தை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் மகாலில் இருக்கின்ற அவருடைய சிலைக்கு அமைச்சர்கள் கடம்பூர் ராஜு ,மற்றும் செல்லூர் ராஜு ,சட்டசபை உறுப்பினர்கள், மற்றும் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், போன்றோர் மாலை அணிவித்து மரியாதை செய்திருக்கிறார்கள்.

அந்த நிகழ்வுக்கு பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜு பத்திரிகையாளர்களை சந்தித்தபோது அவர் தெரிவித்ததாவது, ஜெயலலிதா மட்டுமே இறந்துபோன தலைவர்களுக்கு மணிமண்டபங்கள் உருவாக்கி வந்தார். ஜெயலலிதா தலைவர்களின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட முடிவு செய்து அறிவித்தார். அந்த வகையில் விரைவில் மதுரையில் மன்னர் திருமலை நாயக்கர் அவர்களின் முழு உருவச்சிலை உருவாக்கப்படும். வேதா இல்லம் தொடர்பான வழக்கு அடுத்த கட்ட விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது பொதுமக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்படும் விவரம் குறித்து முடிவு தெரியவரும் என்று தெரிவித்தார்.

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தில் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு விரைவில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். எல்லா விதிமுறைகளுக்கும் உட்பட்டு போயஸ் தோட்ட இல்லம் அரசுடமையாக்கப்பட்ட இருக்கிறது என்று தெரிவித்த அவர், சசிகலாவின் விடுதலைக்கும் ஜெயலலிதாவின் நினைவிடம் திறக்கப்பட்டதற்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது. ஜெயலலிதாவின் நினைவிடம் திறக்கப்பட்டபோது ஒன்று சேர்ந்த கூட்டம் தானாக ஒன்று சேர்ந்த கூட்டம் என்று அவர் தெரிவித்தார்.