நாளை மாமல்லபுரத்தில் சீன அதிபரை சந்திக்கும் நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் பிரதமர் மோடி திடீர் சந்திப்பு

0
192

நாளை சீன அதிபரை சந்திக்கும் நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் பிரதமர் மோடி திடீர் சந்திப்பு

பாரத பிரதமர் நாளை மாமல்லபுரத்தில் சீன அதிபரை சந்திக்கும் நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களுடன் திடீர் சந்திப்பு ஏன் என்று பல்வேறு குழப்பங்கள் உருவாக்கிய சூழ்நிலையில் பாமகவின் சார்பாக இது குறித்த விரிவான அறிக்கை வெளியாகி உள்ளது.அதில் குறிப்பிட்டுள்ளதாவது.

7 தமிழர்களை விடுதலை செய்ய கோரிக்கை

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களும், பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களும் இன்று காலை 11.30 மணிக்கு சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பு 20 நிமிடங்களுக்கு நீடித்தது.

இந்திய – சீன உறவுகளை வலுப்படுத்துவது குறித்து சீன அதிபர் ஷி ஜின்பிங் – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான பேச்சுக்கள் நாளையும், நாளை மறுநாளும் வரலாற்று சிறப்பு மிக்க மாமல்லபுரத்தில் நடைபெறுவதை சுட்டிக்காட்டிய மருத்துவர் அய்யா அவர்கள், இதனால் தமிழக மக்கள் பெருமையடைவதாகவும், இதற்காக தமிழக மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் மருத்துவர் அய்யா அவர்கள் கூறினார்கள்.

29 ஆண்டுகளாக சிறைகளில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி பிரதமரிடம் மனு ஒன்றை மருத்துவர் அய்யா அவர்கள் வழங்கினார். பிரதமரிடம் மருத்துவர் அய்யா வழங்கிய மற்றொரு மனுவில் கோதாவரி – காவிரி ஆறுகளை இணைப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும், காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் ஆகிய 3 கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன.

மனுக்களை பெற்றுக் கொண்ட பிரதமர் அவர்கள், அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள கோரிக்கைகள் அனைத்தையும் சாதகமான முறையில் பரிசீலிப்பதாக உறுதியளித்தார். பிரதமருடனான மருத்துவர் அய்யா, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரின் சந்திப்பு மிகவும் சுமூகமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் அமைந்திருந்தது.

பிரதமரிடம் மருத்துவர் அய்யா அவர்கள் அளித்த மனுக்களின் விவரம் வருமாறு:

மனு எண் 1: 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்

பொருள்: 29 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்யக் கோருதல் & தொடர்பாக

உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் உணர்வுகள் மற்றும் நீண்ட நாள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் நோக்கம் கொண்ட மனிதநேய கோரிக்கை மீது இந்தியப் பிரதமராகிய தங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக, தமிழ்நாட்டு மக்களின் சார்பில் இந்தக் கடிதத்தை தங்கள் முன்வைக்கிறேன்.

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற ‘‘நலமா மோடி?’’ நிகழ்ச்சியில் ‘‘எல்லோரும் சவுக்கியம்’’ என்று தமிழில் கூறி இந்தியர்களின் நலனை அமெரிக்க வாழ் மக்களிடம் தெரிவித்ததன் மூலமும், நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐநா பொது அவைக் கூட்டத்தில் கணியன் பூங்குன்றனாரின்,‘‘ யாதும் ஊரே, யாவரும் கேளீர்’’ என்ற வரிகளைக் கூறி, உலக அளவிலான ஒற்றுமையை வலியுறுத்தியதன் மூலமும் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் மனதில் தாங்கள் நீங்காத இடம் பிடித்திருக்கிறீர்கள்.

தொடர்ந்து செப்டம்பர் 30&ஆம் தேதி சென்னை விமான நிலையம், ஐ.ஐ.டி பட்டமளிப்பு விழா, ஐ.ஐ.டி ஆராய்ச்சிப் பூங்காவில் நடைபெற்ற சிங்கப்பூர் & இந்தியா ஹேக்கத்தான் நிகழ்ச்சி ஆகியவற்றில் உரையாற்றும் போது தமிழர் கலாச்சாரம், உணவு வழக்கங்கள், தமிழர் நாகரிகம் ஆகியவை குறித்து தாங்கள் குறிப்பிட்ட தகவல்கள் தமிழர்களுக்கும், தங்களுக்கும் இடையிலான உறவையும், உணர்வையும் நெருக்கமாக்கியிருக்கின்றன. தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வதற்கு இந்த நெருக்கம் தங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளேன்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேருக்கு தொடக்கத்தில் தூக்கு தண்டனை விதிக்கப் பட்டு, பின்னர் பல்வேறு காலகட்டங்களில் ஆயுள் தண்டனையாக குறைக்கப் பட்டது. இவர்கள் அனைவரும் 1991&ஆம் ஆண்டு முதல் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் பேரறிவாளனுக்கு எந்த தொடர்பும் இல்லை; அவரது வாக்குமூலத்தை தாம் திரித்து எழுதியதால் தான் அவர் தண்டிக்கப்பட்டார் என்று இந்த வழக்கை விசாரித்த மத்திய புலனாய்வுப் பிரிவின் விசாரணை அதிகாரி தியாகராஜன் ஒப்புக் கொண்டிருக்கிறார். இதுதொடர்பாக அவர் உச்ச நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்து அவர்களுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகளில் ஒருவராக கே.டி.தாமஸ், இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்டோர் குற்றம் செய்திருப்பார்கள் என்று தாம் நம்பவில்லை என்றும், அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர்கள் ராஜிவின் துணைவியாரான சோனியா காந்திக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியுள்ளார்.

7 தமிழர்களை விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளதா? மாநில அரசுக்கு உள்ளதா? என்பது குறித்து வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 6&ஆம் தேதி தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பில், 7 தமிழர்களையும் விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்றும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 161&ஆவது பிரிவின்படி தமிழக ஆளுனர் மூலம் 7 தமிழர்களையும் தமிழக அரசு விடுதலை செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

அதனடிப்படையில், 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை தமிழக அமைச்சரவை கடந்த ஆண்டு செப்டம்பர் 9&ஆம் தேதி நிறைவேற்றி தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் அவர்களுக்கு அனுப்பி வைத்தது. அதன்மீது ஆளுனர் விரைந்து முடிவெடுப்பார் என்று ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்பார்த்தது; காத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், தமிழக அமைச்சரவையின் பரிந்துரை அனுப்பப்பட்டு நேற்றுடன் ஓராண்டும், ஒரு மாதமும் நிறைவடைந்து விட்ட நிலையில், இன்று வரை அதன் மீது தமிழக ஆளுனர் அலுவலகம் எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்திக் கொண்டிருக்கிறது. இந்த தாமதம் உலககெங்கும் வாழும் தமிழர்களுக்கு ஏமாற்றத்தையும், வேதனையையும் அளித்துள்ளது.

7 தமிழர்களை விடுதலை செய்ய சட்டப்படியோ, அரசியல் ரீதியாகவோ எந்த தடையும் இல்லை. அவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு; அதில் வேறு யாரும் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அதேபோல், 7 தமிழர்களையும் விடுதலை செய்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று ராஜிவ் காந்தியின் துணைவியார் சோனியா காந்தி அவர்களும், புதல்வர் ராகுல் காந்தி அவர்களும் பல்வேறு கால கட்டங்களில் கூறியுள்ளனர். 7 தமிழர்களையும் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் மறைந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும், கேரள முன்னாள் சட்ட அமைச்சருமான வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்களும் தொடர்ந்து வலியுறுத்தினார்.

7 தமிழர்களை விடுதலை செய்ய வலுவான காரணங்கள் உள்ளன; அவர்களின் விடுதலைக்கு எதிராக எந்த காரணமும் இல்லை. அவ்வாறு இருக்கும் போது அவர்களின் விடுதலை தொடர்பான முடிவை ஆளுனர் தாமதிப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை. அதுமட்டுமின்றி, 7 தமிழர்களும் 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நிலையில், அவர்களை தொடர்ந்து சிறைகளில் அடைத்து வைத்திருப்பது மிகப்பெரிய மனித உரிமை மீறலாகவே பார்க்கப்படக் கூடும்.

பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சர் பியாந்த்சிங் கடந்த 1995-ஆம் ஆண்டு மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்ட வழக்கில் முதன்மைக் குற்றவாளியும், பாபர்கல்சா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவருமாகிய பல்வந்த்சிங் ரஜோனாவின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து மத்திய உள்துறை அமைச்சகம் ஆணையிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் பல்வேறு மாநில சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பாபர்கல்சா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 8 பேரையும் விடுதலை செய்ய மத்திய அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது. தடா சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டுள்ள இவர்கள் அனைவரின் தண்டனையையும் சீக்கிய குருமார்களில் ஒருவரான குருநானக் அவர்களின் 550&ஆவது பிறந்தநாளையொட்டி மத்திய அரசு குறைத்துள்ளது. இதே கருணையை 7 தமிழர்களிடமும் காட்டுவதற்கு எந்தத் தடையும் இருக்காது என்று நம்புகிறேன்.

எனவே, உலகெங்கும் உள்ள தமிழர்களின் கோரிக்கையையும், எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றும் வகையில், தமிழக அமைச்சரவைத் தீர்மானத்தில் பரிந்துரைத்துள்ளவாறு 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மாண்புமிகு பிரதமராகிய தங்களைக் கேட்டுக்கொள்கிறேன். இக்கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் அதற்காக ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமும் தங்களுக்கு என்றென்றும் நன்றிக்கடன்பட்டிருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Previous articleபல்லவ தேசத்தில் சீன அதிபர் தமிழகத்தின் வரலாறு பக்கம் மீது உலக தலைவர்களின் பார்வையை திருப்பிய மோடி
Next article2019 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு