தொடர்ந்து தமிழகத்தை புறக்கணிக்கும் மத்திய அரசு! கடமையிலிருந்து தப்பிக்க முடியாது என மருத்துவர் ராமதாஸ் விமர்சனம்

Photo of author

By Ammasi Manickam

தொடர்ந்து தமிழகத்தை புறக்கணிக்கும் மத்திய அரசு! கடமையிலிருந்து தப்பிக்க முடியாது என மருத்துவர் ராமதாஸ் விமர்சனம்

காவிரியை தூய்மை படுத்தும் தமிழக அரசின் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்காததை குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் “காவிரியை தூய்மைப்படுத்தும் திட்டம்: மத்திய அரசு நிதி வழங்க வேண்டும்! ” என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது.

காவிரி ஆற்றைத் தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு நிதியுதவி வழங்க மத்திய அரசு மறுத்து விட்டதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சி அளிக்கின்றன. இந்தியாவின் பெரிய நதிகளில் ஒன்றும், புனிதமான நதிகளில் குறிப்பிடத்தக்கதுமான காவிரி ஆறு அசுத்தங்களாலும், கழிவுகளாலும் நஞ்சாக மாறிக் கொண்டிருக்கும் நிலையில் அதை தடுக்க உதவ மறுப்பது நியாயமற்றது.

காவிரியை தூய்மைப்படுத்துவதற்காக ‘‘நடந்தாய் வாழி காவேரி’’ என்ற திட்டத்தை தமிழக அரசு தயாரித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 15-ஆம் தேதி தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்தித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, இந்தத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதன் தொடர்ச்சியாக கடந்த திசம்பர் இறுதியில் தில்லியில் மத்திய நீர்வள அமைச்சக செயலாளர் யு.பி.சிங் அவர்களை தில்லியில் சந்தித்த தமிழக தலைமைச் செயலர் சண்முகம், இத்திட்டம் மற்றும் அதற்கான நிதியுதவி பற்றி நினைவூட்டியிருக்கிறார். அப்போது திட்டத்தின் நோக்கம் மற்றும் அவசியத்தை பாராட்டிய யு.பி.சிங், அதேநேரத்தில் இத்திட்டத்திற்கு மத்திய அரசால் எந்த நிதி உதவியும் வழங்க இயலாது என்று கூறி விட்டதாக தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

மத்திய அரசிடம் போதிய நிதியுதவி இல்லை என்று கூறியோ, வேறு காரணங்களை அடுக்கியோ இந்தத் திட்டத்திற்கு நிதியுதவி வழங்க மத்திய அரசு மறுக்க முடியாது. காரணம் காவிரியை சுத்தப்படுத்த உதவி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் மத்திய அரசுக்கு உண்டு. காரணம், காவிரி ஆற்றை அசுத்தப்படுத்தியதில் பெரும்பங்கு கர்நாடக அரசுக்கு உண்டு. பெங்களூரு நகரிலும், அதையொட்டிய பகுதிகளிலும் உள்ள வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து ஒவ்வொரு நாளும் 150 கோடி லிட்டர் கழிவுகள் காவிரியில் கலக்கவிடப்படுகின்றன. இதை கர்நாடக சட்டப்பேரவையில் அம்மாநில அமைச்சர் ஒருவரே வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறார். மேலும், காவிரி ஆறு மாநிலங்களிடையே ஓடும் ஆறு என்ற வகையிலும் அதன் தூய்மைப்பணிக்கு மத்திய அரசு கட்டாயமாக உதவ வேண்டும்.

இந்தியாவில் வேகமாக சீரழியும் ஆறுகளில் காவிரியும் ஒன்று. ஆறுகள் சீரழிவதை தடுக்க வேண்டிய கடமையிலிருந்தும் கடந்த கால மத்திய அரசுகள் தவறி விட்டன. ஆறுகள் மாசுபடுவதற்கு காரணம் வீடுகள் மற்றும் தொழிற்சாலை கழிவுகள் கலக்கவிடப்படுவது தான். அதைத் தடுப்பதற்காக பெரிய நகரங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை மாநில அரசுகள் அமைப்பதை மத்திய அரசு உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால், இந்தியாவில் நகர்ப்புற பகுதிகளில் ஒரு நாளுக்கு 6194 கோடி லிட்டர் கழிவு நீர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் நிலையில், அவற்றில் 38% கழிவுநீரை சுத்திகரிக்கும் அளவுக்கு மட்டும் தான் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றிலும் மூன்றில் இரு பங்கு அளவுக்கு மட்டும் தான் கழிவுநீர் சுத்திகரிக்கப்படுகிறது என்பதால், ஒவ்வொரு நாளும் 3800 கோடி லிட்டர் கழிவு நீர் ஆறுகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தான் கலக்கின்றன. உண்மை இவ்வாறு இருக்கும் நிலையில், இதனால் ஏற்பட்ட பாதிப்புகளை களைவதற்கு உதவ முடியாது என்று கூறி, தமது கடமையிலிருந்து மத்திய அரசு ஒருபோதும் விலகிச் செல்ல முடியாது.

காவிரி பாயும் மாநிலங்களில் தமிழகத்தை எடுத்துக் கொண்டால், நகர்ப்புறங்களில் இருந்து மட்டும் தினமும் 559 கோடி லிட்டர் கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. ஆனால், தமிழகத்தின் கழிவுநீர் சுத்திகரிப்பு திறன் வெறும் 179 கோடி மட்டும் தான். அதேபோல், கர்நாடகத்தின் நகர்ப்புறங்களில் இருந்து தினமும் 377 கோடி லிட்டர் கழிவு நீர் வெளியேற்றப்படும் நிலையில், அம்மாநிலத்தின் சுத்திகரிப்பு திறன் வெறும் 130 கோடி லிட்டர் மட்டும் தான். இந்த புள்ளி விவரங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரின் அளவு குறித்தவை மட்டும் தான். தொழிற்சாலைகளில் இருந்தும், கிராமப்புறங்களிலிருந்தும் வெளியேற்றப்படும் கழிவுநீர் குறித்த துல்லியமான புள்ளிவிவரங்கள் எந்த அரசு நிறுவனத்திடமும் இல்லை.

‘‘காவிரியைக் காப்போம்’’ என்ற தலைப்பில் பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், 2017-ஆம் ஆண்டு ஓகனேக்கல் முதல் பூம்புகார் வரை மேற்கொண்ட விழிப்புணர்வு பரப்புரையின் போது காவிரியில் கழிவுகள் கலப்பது தொடர்பான புள்ளி விவரங்களை ஆவணப்படுத்தினார். மேட்டூர் கெம்பிளாஸ்ட் ஆலையிலிருந்து மட்டும் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய கார்சினோஜென், நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்கும் டையாக்சின் உள்ளிட்ட 28 வகையான நச்சுப்பொருட்கள் காவிரியில் கலக்க விடப்படுவதாகவும், பொதுமக்கள் புனித நீராடும் கும்பகோணத்தில் மட்டும் 52 வகை நச்சுப்பொருட்கள் இருப்பதாக ஆய்வில் தெரியவந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

காவிரி ஆற்றின் நிலைமை இவ்வளவு மோசமாக சென்று கொண்டிருக்கும் நிலையில், காவிரியை தூய்மைப்படுத்துவதில் மத்திய அரசு பொறுப்பை தட்டிக்கழிக்க முடியாது. கங்கை ஆற்றை தூய்மைப்படுத்த 2020&ஆம் ஆண்டிற்குள் ரூ.20,000 கோடி செலவிடப்படும் என்று அறிவித்து மத்திய அரசு நிதி ஒதுக்கி வருகிறது. யமுனை ஆற்றை சீரமைக்கும் திட்டத்திற்காக உத்தரப்பிரதேசம், ஹரியானா, தில்லி ஆகிய மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.1,515 கோடி ஒதுக்கியுள்ளது. அவ்வாறு இருக்கும் போது காவிரியை தூய்மைப்படுத்துவதற்காக நிதி உதவி வழங்க மத்திய அரசு மறுப்பது நியாயமல்ல.

காவிரியை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு மொத்தம் ரூ.11,250 கோடி செலவாகும் என மதிப்பிடப் பட்டுள்ளது. அதில் ஒரு பகுதியை மானியமாகவும், தமிழக அரசின் பங்களிப்பு தவிர மீதமுள்ள தொகையை பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து கடனாகவும் பெற்றுத்தர மத்திய அரசு முன்வர வேண்டும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.