தமிழகத்தில் அமையவுள்ள 6 மருத்துவக் கல்லூரிகள் பணியை விரைந்து முடிக்க வேண்டும்- மருத்துவர் ராமதாஸ்

Photo of author

By Ammasi Manickam

தமிழகத்தில் அமையவுள்ள 6 மருத்துவக் கல்லூரிகள் பணியை விரைந்து முடிக்க வேண்டும்- மருத்துவர் ராமதாஸ்

மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி என்ற முறையில் தமிழக அரசுடன் இணைந்து மத்திய அமைக்கவுள்ள 6 மருத்துவ கல்லூரிகள் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

தமிழ்நாட்டில் அடுத்த இரு ஆண்டுகளுக்குள் தமிழக அரசுடன் இணைந்து 6 புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற கனவு இலக்கை எட்டுவதற்கு உதவும் வகையில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது ஆகும்.

தமிழ்நாட்டிற்கு புதிய மருத்துவக் கல்லூரிகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக முதன்முதலில் குரல் கொடுத்தது பாட்டாளி மக்கள் கட்சி என்ற வகையில் மத்திய அரசின் நடவடிக்கை மகிழ்ச்சியளிக்கிறது. தில்லியில் கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு கூட்டத்தில், நாடு முழுவதும் 75 மருத்துவக் கல்லூரிகளை ரூ.24,375 கோடி செலவில் அமைக்க தீர்மானிக்கப்பட்டது. அதற்கு முன் இரு கட்டங்களில் மத்திய அரசு அறிவித்த 82 புதிய மருத்துவக் கல்லூரிகளில் ஒன்று கூட தமிழகத்திற்கு கிடைக்காததை சுட்டிக் காட்டிய நான், புதிதாக அறிவிக்கப்பட்ட 75 மருத்துவக் கல்லூரிகளில் குறைந்தது 10 மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி ஆகஸ்ட் 30-ஆம் தேதி அறிக்கை வெளியிட்டேன். அதைத் தொடர்ந்து தமிழக அரசின் சார்பிலும் மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கைகளின் பயனாக தமிழகத்திற்கு இப்போது 6 மருத்துவக் கல்லூரிகள் கிடைத்துள்ளன.

தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டங்களான இராமநாதபுரம், விருதுநகர், இதுவரை மருத்துவக் கல்லூரிகள் இல்லாத நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படவுள்ளன. அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைகளுடன் இணைத்து ஏற்படுத்தப்படவுள்ள இந்த கல்லூரிகள் அனைத்திலும் தலா 150 இடங்கள் இருக்கும். தமிழகத்தில் ஏற்கனவே 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 3250 இடங்கள், அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி, சென்னை இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி, பெருந்துறை ஐ.ஆர்.டி மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் உள்ள 350 இடங்கள் ஆகியவற்றுடன் புதிதாக அமைக்கப்படும் கல்லூரிகளின் இடங்களையும் சேர்த்தால் அரசுக் கல்லூரிகளில் மட்டும் 4,500 எம்.பி.,பி.எஸ் இடங்கள் இருக்கும். இதன்மூலம் அதிகபட்ச மருத்துவ இடங்கள் கொண்ட மாநிலம் என்ற பெருமை தமிழகத்துக்கு கிடைக்கும்.

தலா ரூ.325 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள இந்த மருத்துவக் கல்லூரிகள் அனைத்தும் வரும் 2021-22 ஆம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வர வேண்டும். தமிழகத்தில் 6 மருத்துவக் கல்லூரிகளை அமைக்க இந்திய மருத்துவக் குழுவின் தொழில்நுட்பக்குழு அனுமதி அளித்துள்ள நிலையில், அடுத்தக் கட்டமாக அதிகாரமளிக்கப்பட்ட குழு ஒப்புதல் அளிக்க வேண்டும். இந்த நடைமுறைகள் அனைத்தும் அடுத்த சில வாரங்களில் முடிவடைந்தாலும் கூட, கல்லூரிகளைத் தொடங்க அதன்பின்னர் ஒன்றரை ஆண்டுகள் மட்டும் தான் இருக்கும். இந்த அவகாசம் மிகவும் குறைவு என்பதால் மருத்துவக் கல்லூரி அமைக்கும் பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும். 6 மருத்துவக் கல்லூரிகளுக்குமான இடங்களை தமிழக அரசு அடையாளம் காட்டியுள்ள நிலையில், கல்லூரிகளின் கட்டுமானப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் பிற அனுமதிகளை விரைந்து வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்ட பிறகும் திருவள்ளூர், கடலூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்கள், புதிதாக உருவாக்கப்படவுள்ள திருப்பத்தூர், இராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்கள், மாவட்டப் பிரிவினைக்குப் பிறகு செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரி சென்று விட்டதால் கல்லூரி இல்லாத காஞ்சிபுரம் என மொத்தம் 12 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட வேண்டும். இம்மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கான கால அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டு, அதன் அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசு அமைக்கவுள்ள 6 புதிய மருத்துவக் கல்லூரிகளில் ஒன்று கூட வட மாவட்டங்களில் இல்லாத நிலையில், தமிழக அரசு புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்கும் போது வட மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

இவற்றுக்கெல்லாம் மேலாக, நரேந்திர மோடி அரசு முதன்முறையாக பதவியேற்ற பின்னர் 2015&ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட முழுமையான முதல் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி அறிவிக்கப்பட்டு வரும் பிப்ரவரி மாதத்துடன் 5 ஆண்டுகள் நிறைவடையவுள்ளன. அதற்கு முன்பாக அக்கல்லூரிக்கு நிதி ஒதுக்கீடு செய்து கட்டுமானப் பணிகளை மத்திய அரசு தொடங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.