இரு நாட்டு உடன்படிக்கையை மீறி அத்துமீறலில் ஈடுபட்ட சிங்களப்படை! கண்டிக்கும் மருத்துவர் ராமதாஸ்

0
190
Dr Ramadoss-News4 Tamil Online Tamil News
Dr Ramadoss-News4 Tamil Online Tamil News

இரு நாட்டு உடன்படிக்கையை மீறி தமிழக மீனவர்களை தாக்கிய சிங்களப்படை மீது கடுமையான நடவடிக்கை வேண்டும்! என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.

வங்கக்கடலில் கச்சத்தீவு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் மீது சிங்களப் படையினர் கற்களையும், கண்ணாடி பாட்டில்களையும் வீசி கொடூரமானத் தாக்குதலை நடத்தியுள்ளனர். தமிழக மீனவர்கள் மீதான இலங்கைப் படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 3600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் 600-க்கும் கூடுதலான படகுகளில் வங்கக்கடலுக்கு சென்று கச்சத்தீவு அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். ஐந்து ரோந்து படகுகளில் இன்று காலை அங்கு வந்த சிங்களக் கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது கற்களையும், கண்ணாடி பாட்டில்களையும் வீசிக் கண்மூடித்தனமாக தாக்கினார்கள். இராமேஸ்வரம் மீனவர்கள் கடலில் விரித்திருந்த வலைகளையும் அறுத்து சேதப்படுத்தியுள்ளனர். சிங்களப் படையினரின் தாக்குதலில் இரு மீனவர்கள் கடுமையாக காயமடைந்துள்ளனர். பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி வலைகள் சேதமடைந்துள்ளன.

இலங்கைப் படையினரின் இந்த செயல் அத்துமீறல் ஆகும். தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகிலுள்ள இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில், சிங்களப் படையினர் தான் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி, இந்திய – இலங்கை கூட்டுப் பணிக்குழுக்களுக்கு இடையே 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற கூட்டத்தில், இந்திய, இலங்கை மீனவர்கள் எல்லை தாண்டிச் சென்று மீன் பிடித்தால் கூட அவர்களை கைது செய்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கு தான் உட்படுத்த வேண்டுமே தவிர, அவர்களுக்கு காயங்களை ஏற்படுத்தக்கூடிய செயல்களிலோ, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய தாக்குதலிலோ ஈடுபடக்கூடாது என்று முடிவு செய்யப்பட்டதாக இரு தரப்பும் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருந்தது. ஆனால், அந்த உடன்பாட்டை மீறிய வகையில் சிங்களப் படையினர் தமிழக மீனவர்கள் மீது, போக்கிலிகளைப் போல கற்களை வீசித் தாக்கியிருப்பதை மத்திய, மாநில அரசுகள் சும்மா விடக்கூடாது.

தமிழக மீனவர்கள் மீதான சிங்களப் படையினரின் இந்த அத்துமீறல் கடந்த 10 நாட்களில் இரண்டாவது முறை ஆகும். ஏற்கனவே கடந்த 18-ஆம் தேதி கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை சிங்களப் படையினர் துப்பாக்கியைக் காட்டி விரட்டியடித்தனர். அதனால் ஏற்பட்ட பதற்றம் அடங்கும் முன்பே அடுத்த தாக்குதலை நடத்தியிருப்பது இந்தியாவுக்கு விடப்பட்ட சவாலாகும்.

சிங்களக் கடற்படையினரால் கடந்த காலங்களில் 800-க்கும் அதிகமானவர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்; நூற்றுக்கணக்கான படகுகளும் சிறை பிடிக்கப்பட்டன- சேதப்படுத்தப்பட்டன; லட்சக்கணக்கான மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இவ்வளவுக்குப் பிறகும் இலங்கை அரசு மீது இந்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது நியாயமல்ல. ஒருபுறம் இந்திய மீனவர்கள் மீது சிங்களக் கடற்படை தாக்குதல் நடத்தி வரும் வேளையில், மற்றொருபுறம் அதே சிங்களக் கடற்படையுடன் இணைந்து இந்திய கடற்படை கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுகிறது. இந்தியாவின் இத்தகைய ஊக்குவிப்புகள் தான் தமிழக மீனவர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் துணிச்சலை சிங்களப் படைக்கு அளிக்கிறது.

தமிழக மீனவர்கள் மீதான சிங்களப் படையினரின் தாக்குதல்களை இனியும் மத்திய, மாநில அரசுகள் சகித்துக் கொண்டிருக்கக் கூடாது. தமிழக மீனவர்கள் மீது கடந்த காலங்களில் சிங்களைப் படையினர் நடத்திய தாக்குதல்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். அதுமட்டுமின்றி, தில்லியில் உள்ள இலங்கைத் தூதரை அழைத்து தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

 

Previous articleமோடியின் காலை பிடிக்கும் எடப்பாடி…! முதல்வரை விளாசிய முக்கிய புள்ளி…!
Next articleபதவி சுகம் மற்றும் ஊழல் முறைகேடுகளிலிருந்து தப்பிக்க மாணவர்கள் நலனை காவு கொடுக்கிறாரா முதலமைச்சர்? ஸ்டாலின் கேள்வி