மருத்துவர் ராமதாஸ் கூறும் உலகின் எட்டாவது ஒன்பதாவது பத்தாவது அதிசயம்

Photo of author

By Ammasi Manickam

மருத்துவர் ராமதாஸ் கூறும் உலகின் எட்டாவது ஒன்பதாவது பத்தாவது அதிசயம்

தமிழ்நாடு மின்வாரிய தேர்வு அறிவிப்பின் ஒருவர் தேர்வெழுதி வெற்றி பெற்று அரசு பணிகளில் சேருவது என்பது உலகின் எட்டாவது ஒன்பதாவது பத்தாவது அதிசயமாக தான் இருக்க முடியும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் “மின்வாரிய பணியாளர்கள் தேர்வு: வயது வரம்பை உயர்த்த வேண்டும்!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின்பயன்பாட்டு அளவு கணக்கீட்டாளர், உதவிப் பொறியாளர்கள், இளநிலை உதவியாளர் ஆகிய பணிகளுக்கு 2400 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ளது. எனினும், அப்பணிகளுக்கான வயது வரம்பு காலத்திற்கு ஏற்ற வகையில் நிர்ணயிக்கப்படாதது பலரின் வாய்ப்புகளை பறித்திருக்கிறது.

மின்சார வாரியத்தில் கணக்கீட்டாளர் பணிக்கு 1300 பேரும், உதவிப் பொறியாளர் பணிக்கு 600 பேரும் தேர்வு செய்யப்படவுள்ளனர். இப்பணிகளுக்கு விண்ணப்பிப்போர் அனைவருக்கும் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பை பொறுத்தவரை பொதுப்பிரிவினருக்கு 30 வயது, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 32 வயது, பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு 35 வயது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தவிர இளநிலை உதவியாளர் (கணக்குகள்) பணிக்கு 500 பேர் நியமிக்கப்படவுள்ளனர். அவர்களில் பொதுப்பிரிவினருக்கு 30 வயது உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு உச்சவரம்பு நிர்ணயிக்கப்படவில்லை.

உதவிப் பொறியாளர், கணக்கீட்டாளர் பணிகளில் அனைத்துப் பிரிவினருக்கும், இளநிலை உதவியாளர் பணிக்கு பொதுப்பிரிவினருக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது உச்சவரம்பு எவ்வகையிலும் நியாயமற்றது. போட்டிகள் நிரம்பிய இன்றைய சூழலில் போட்டித்தேர்வுகளை எழுதி, நேர்காணலில் வெற்றி பெற்று பொதுப்பிரிவினர் 30 வயதுக்குள்ளாகவும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 32 வயதிலும், பட்டியலினம் மற்றும் பழங்குடியினர் 35 வயதுக்குள்ளும் அரசு பணிகளில் சேருவது என்பது உலகின் எட்டாவது, ஒன்பதாவது, பத்தாவது அதிசயமாகத்தான் இருக்க முடியும். தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் பொறியியல் படிப்பை முடித்து பட்டம் பெறுகின்றனர்; சுமார் 4 லட்சம் பேர் கலை மற்றும் அறிவியல் பாடங்களில் பட்டப்படிப்பை முடிக்கின்றனர். ஆனால், இவர்களில் ஒரு விழுக்காட்டினருக்குக் கூட ஆண்டு தோறும் அரசு வேலை கிடைப்பதில்லை. அதேபோல், அரசு பணிகளுக்கு ஆட்தேர்வு ஆண்டு தோறும் நடப்பதும் இல்லை. இளநிலைப் பட்டம் பெற்ற ஒருவர் 30 வயதுக்குள் இரு முறையும், 35 வயதுக்குள் மூன்று முறையும் அரசு பணிக்கான போட்டித் தேர்வை எழுதுவது மிகப்பெரிய வரம்.

உண்மை நிலை இவ்வாறு இருக்கும் போது பொதுப்பிரிவினர் 30 வயதுக்குப் பிறகும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 32 வயதுக்குப் பிறகும், பட்டியலினம் மற்றும் பழங்குடியினர் 35 வயதுக்குப் பிறகும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்க முடியாது என்பது மிகப்பெரிய சமூக அநீதியாகும். மின்வாரியப் பணிகளுக்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வயது வரம்புகள் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து நிர்ணயிக்கப்பட்டவை அல்ல என்றே தோன்றுகிறது. ஏனெனில், மேற்கண்ட 3 பணிகளுக்கும் குறைந்தபட்ச கல்வித் தகுதி பொறியியல் படிப்பு அல்லது கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் பட்டப்படிப்புகள் ஆகும். எந்த வகுப்பிலும் தோல்வியடையாத ஒரு மாணவர் பட்டப்படிப்பை முடிக்கவே 21 அல்லது 22 வயதாகி விடும். ஆனால், இந்த 3 பணிகளுக்கும் குறைந்தபட்ச வயது வரம்பு 18 வயது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 22 வயதில் தான் ஒருவரால் கல்வித்தகுதியையே பெற முடியும் எனும் சூழலில், அவரை 18 வயதில் தேர்வெழுத அனுமதிப்பது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் செயலாகும்.

மின்வாரியத்தின் சார்பில் கடந்த ஆண்டு கேங்மேன் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்ட போது, அதிகபட்ச வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 35 ஆகவும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 37 ஆகவும், பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கு 40 ஆகவும் இருந்தது. ஒரே ஆண்டில் அதிகபட்ச வயது வரம்பை அனைத்துப் பிரிவினருக்கும் தலா 5 ஆண்டுகள் குறைந்தது நியாயமற்றது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சில போட்டித் தேர்வுகளை எழுத இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 40 ஆக உள்ளது. பல தேர்வுகளுக்கு வயது வரம்பு இல்லை.

மேற்கண்ட அம்சங்கள் அனைத்தையும் அலசி ஆராய்ந்து மின்வாரியப் பணியாளர் தேர்வில் அதிக பட்ச வயது வரம்பை நிர்ணயிப்பதில் இழைக்கப்பட்டுள்ள அநீதியை அரசு களைய வேண்டும். அனைத்து பணிகளுக்கும் அதிகபட்ச வயதை குறைந்து 5 ஆண்டுகள் உயர்த்த மின்வாரியம் முன்வர வேண்டும் என்றும் அவர் அதில் கூறியுள்ளார்.