அன்புமணி ராமதாஸுக்கு அமைச்சர் பதவியா? ராமதாஸ்-மோடி சந்திப்பின் பின்னணி!
சென்னை: மாமல்லபுரத்தில் நாளை 11 ஆம் தேதி மற்றும் 12 ஆம் தேதிகளில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் சந்தித்து பேசவுள்ள நிலையில் தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரான பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டியில் இடைத்தேர்தலை அறிவித்த பின் வன்னியர் வாக்குகளை வளைக்க திட்டமிட்ட திமுகவுடன் அறிக்கைப் போரை நடத்திக் கொண்டிருந்த பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று திடீரென பிரதமர் மோடியை சந்தித்துப் பேசியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாமக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது. இந்த கூட்டணியில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்த நிலையில், மக்களவை தேர்தல் கூட்டணி உடன்படிக்கையின் படி அதிமுகவின் ஆதரவால் அன்புமணி மட்டும் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வாகியுள்ளார். ஏற்கெனவே தேசிய ஜனநாயக் கூட்டணியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஓபிஎஸ் மகன் ரவிந்தரநாத் அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் தமிழகத்தின் சார்பில் அவருக்கு அந்த வாய்ப்பு வழங்கவில்லை. இந்த நிலையில், நீண்ட காலத்துக்குப் பிறகு ராமதாஸ் டெல்லிக்கே சென்று பிரதமர் மோடியை சந்தித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இன்று பிரதமர் மோடியை மருத்துவர் ராமதாஸ் சந்திக்கப் போகும் விவரமே பலருக்கும் தெரியாமல் இருந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை டெல்லி சென்றடைந்த மருத்துவர் ராமதாஸ், பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது தமிழகத்தின் நலன் கருதி பாமக சார்பாக பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது என்று அக்கட்சியின் சார்பாக வெளியிடப்பட்டது. ஆனால், இது மட்டுமில்லாமல் வேறு சிலவும் விவாதிக்கப்பட்டது என்று தகவல்கள் கசிகின்றன. அதாவது கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக மோடி, தமிழகம் வந்த போது மற்ற தலைவர்களை விட மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்தார்.
இந்நிலையில் நடந்து முடிந்த அந்தத் தேர்தலில் அன்புமணி ராமதாஸ் வெற்றி பெற்றிருந்தால், கூட்டணியின் சார்பாக அவருக்கு மத்திய அமைச்சர் பதவியை கொடுப்பதாக பேசி வந்தார்கள். ஆனால், தேர்தல் முடிவு அதற்கு நேர்மாறாக வந்தது. அதன் பிறகு பாஜகவின் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவையும் பதவியேற்றது. இதனையடுத்து அதிமுகவின் ஆதரவால் ஜூலை மாதம் தமிழகத்திலிருந்து ராஜ்யசபா உறுப்பினராக அன்புமணி தேர்ந்தெடுக்கப்பட்டார். கூட்டணிக் கட்சி என்ற அடிப்படையில் அவருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று எதிர்பர்க்கபட்டது. ஆனால், தற்போது அமைச்சரவையில் எந்த மாற்றமும் இல்லை என்று பாஜக தரப்பில் கூறப்பட்டது.
இந்த நிலையில், வருகின்ற நவம்பர் மாதம் நாடாளுமன்றம் கூட உள்ளது. அதற்கு முன்பாக மத்திய அமைச்சரவையில் சில மாற்றங்களைச் செய்ய பிரதமர் மோடி விரும்புகிறார் என்று கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் தான் மருத்துவர் ராமதாஸ் மற்றும் பிரதமர் மோடி இடையிலான சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறுகின்றனர்.
இந்த சந்திப்பின் பொது எழுவர் விடுதலை உள்ளிட்ட தமிழக நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் பாமக சார்பாக மருத்துவர் ராமதாஸ் வைத்துள்ளார்.இத்துடன் மக்களவை தேர்தலில் அமைத்த கூட்டணி உடன்படிக்கைப்படி தமிழகத்தின் சார்பாக அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு ஏறக்குறைய பிரதமர் மோடியும் ஆதரவாக பேசியிருப்பதாகவும் கூறுகின்றனர்.
அடுத்து வரும் தேர்தல்களில் தமிழகத்தில் பாஜகவை வளர்க்க இந்த கூட்டணி அவசியம் என்று உணர்ந்த பாஜக அதற்கேற்றவாறு செயல்பட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.இதன் அடிப்படையில் தான் ஏற்கனவே மத்திய சுகாதார துறை அமைச்சராக பல்வேறு சாதனை திட்டங்களை செயல்படுத்திய தமிழகத்தை சேர்ந்த அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு அமைச்சர் பதவி தருவது பற்றி விவாதித்து வருகிறார்கள்.
மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.