திரௌபதி திரை விமர்சனம்! நாடகக் காதல் மற்றும் ஆணவக் கொலைகளின் பின்னணி குறித்து பேசும் திரைக்காவியம்
கடந்த ஒரு மாத காலமாக தமிழ் சினிமாவில் பரபரப்பை கிளப்பி கொண்டிருந்த படம் தான் திரௌபதி. டிரைலர் வெளியாகும் வரை இப்படி ஒரு படம் எடுக்கபடுவதே தெரியாத நிலையில் டிரைலர் வெளியான பிறகு தொடர்ந்து மூன்று நாட்களாக சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கில் இருந்தது தமிழ் திரையுலகினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் இயக்குனரான மோகன்.ஜி இயக்கத்தில், நடிகர் அஜித் மனைவி ஷாலினியின் சகோதரரான ரிச்சர்ட் ரிசி மற்றும் டூ லெட் பட கதாநாயகியான ஷீலா ராஜ்குமார் நடிப்பில்,மனோஜ் நாராயணன் ஒளிப்பதிவில் உருவான இந்த படத்திற்கு ஜூபின் இசையமைத்துள்ளார்.
தமிழ் திரையுலகில் காதல் மற்றும் ஆணவ கொலைகள் குறித்து சமீபத்தில் பல படங்கள் வெளியாகியுள்ள நிலையில் இந்த படம் நாடக காதல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று இயக்குனர் கூறியது தமிழக மக்கள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் பரபரப்பை கிளப்பியது. அந்த வகையில் படம் ஆரம்பிக்கும் போதே மனைவி மற்றும் அவருடைய தங்கையை ஆணவ கொலையை செய்ததற்காக கதாநாயகன் கைதாகி சிறைக்கு செல்வது போன்ற காட்சி படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் கூட்டுகிறது.
சிறைக்கு சென்ற கதாநாயகன் வெளியில் வந்தாரா? ஆணவ கொலையின் பின்னணி என்ன? அதற்கு காரணமானவர்கள் என்னவானார்கள்? காதல் என்ற பெயரில் பெண்கள் எப்படியெல்லாம் ஏமாற்றபடுகிறார்கள்? பெண்ணின் சம்பந்தமேயில்லாமல் செய்யப்படும் போலி பதிவு திருமணம் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த பதிலே இந்த படம்.
படத்தின் கதாநாயகன் ரிச்சர்ட் தன்னுடைய இயல்பான நடிப்பால் ருத்திர பிரபாகரன் என்ற கதாபத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். திரௌபதியாக வரும் கதாநாயகி ஷீலா ராஜ்குமார் அனல் பறக்கும் வசனங்களால் தெறிக்கவிடுகிறார். சென்னையில் நிகழும் படத்தின் முதல் பாகம் முற்றிலும் கதாநாயகனை சுற்றியே நிகழ்ந்தாலும் எந்த இடத்திலும் தொய்வில்லாமல் சுவாரசியத்துடன் அற்புதமாக திரைக்கதையை நகர்த்தியுள்ளார் இயக்குனர் மோகன்.ஜி.முதல் பாதியில் வரும் ஒவ்வொரு கட்சிகளிலும் அடுத்தது என்ன? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி திரில்லர் படத்தை பார்க்கும் அனுபவத்தையும் கொடுத்துள்ளார்.
பிளாஷ் பேக்காக செல்லும் படத்தின் பிற்பாதியில் சமூக ஆர்வலராக வரும் கதாநாயகி ஷீலா மூலமாக இயக்குனர் பல்வேறு செய்திகளை செய்ய முயற்சித்துள்ளது ஆவண படம் போன்ற தோற்றத்தை கொடுத்தாலும் அனல் பறக்கும் அதிரடி வசனங்களால் அதையெல்லாம் மறைத்து இரண்டாம் பாகத்தையும் விறுவிறுப்பாக எடுத்து சென்றுள்ளார். அதே போல படிக்கும் பெண்களை காதல் என்ற பெயரில் ஒரு சிலர் எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள்? எதைக் காட்டி ஏமாற்றுகிறார்கள் என்பது குறித்தும், அரசியல்வாதிகள் தங்கள் பழியை தீர்த்து கொள்ள பெண்களையும், காதலையும் எப்படியெல்லாம் பயன்படுத்திகிறார்கள், மேலும் ஆணவக் கொலைகளுக்கு உண்மையான காரணம் யார்? என்பது குறித்து தெளிவாக காட்டியுள்ளார்கள்.
தன்னுடைய மகள் காதலனுடன் சென்று விட்டாள் என்பதை அறிந்து அவருடைய தந்தை தற்கொலை செய்து கொள்ளும் காட்சி தமிழகத்தில் நடந்த பல்வேறு தற்கொலைகளை நினைவுபடுத்துகிறது.இறுதியாக வரும் நீதிமன்ற காட்சியில் நடிகர் கருணாஸ் வழக்கறிஞராக சிறப்பாக நடித்துள்ளார். பதிவு திருமணம் செய்ய அவர் கூறும் சட்ட திருத்த ஆலோசனைகள் அனைவரையும் சிந்திக்க வைக்கிறது. நீதிமன்ற விசாரணை காட்சியில் போலி பதிவு திருமணத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் தகப்பனாக வரும் மறுமலர்ச்சி படத்தின் இயக்குனர் பாரதியின் உணர்ச்சி பூர்வமான நடிப்பு அனைவர் மனதிலும் நிலைத்து நிற்கிறது.
ஒவ்வொரு படத்திற்கும பலம் சேர்ப்பது பின்னணி இசை தான் அந்த வகையில் இசையமைப்பாளர் ஜுபின் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். இரண்டு பாடல்களே இருந்தாலும் இரண்டும் காதில் ஒலித்து கொண்டே இருக்குமாறு அமைத்துள்ளார். குறிப்பாக குக்குக்குக்கூ பாடல் மீண்டும் மீண்டும் கேட்கும் வண்ணம் சிறப்பாக அமைந்துள்ளது இந்த படத்திற்கு மேலும் பலம் சேர்க்கிறது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்பதால் பல இடங்களில் குறும்படம் போன்ற உணர்வை தந்தாலும் தன்னுடைய எடிட்டிங் மூலம் அதையும் மறைத்து சிறப்பாக செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் தேவராஜ்.
படத்தின் பலம்:
திரைக்கதை
பின்னனி இசை மற்றும் பாடல்கள்
அதிரடி வசனங்கள்
கதாபத்திரங்கள் தேர்வு ( குறிப்பாக வில்லன் கதாபத்திரங்கள் பார்வையாளர்களுக்கு சிலரை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டுகிறது)
படத்தின் பலவீனம்:
பின்னணி குரல்
சில இடங்களில் செயற்கைதனமான வசனங்கள்
பிற்பாதியில் ஆவண பட உணர்வு
ரசிகர்கள் எதிர்பார்த்த டிரைலரிலிருந்த பல அதிரடி வசனங்கள் சென்சாரால் நீக்கப் பட்டது
திரௌபதிக்கு நமது மதிப்பெண் : 75/100
இதுவரை தமிழ் சினிமாவில் விரட்டி விரட்டி காதல் செய்வது, காதலுக்கு எதிராக பெண்ணின் பெற்றோரை சித்தரிப்பது, சாதியே இல்லை என போலித்தனமான காட்சிகளை வைப்பது போன்றவை தொடர்ந்து வந்துள்ள நிலையில் சாதிகள் உள்ளதடி பாப்பா! குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்! என குறிப்பிடும் இந்த திரௌபதி திரைப்படம் அதற்கெல்லாம் சவுக்கடி கொடுப்பது போல அமைந்துள்ளது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் திரௌபதி வெளியாகும் பல்வேறு திரையரங்குகள் முன் பிரபல ரசிகர்கள் நடித்த படத்திற்கு கொடுக்கும் வரவேற்பை போலவே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்