நாட்டின் 15 வது குடியரசுத் தலைவராக இன்று பதவியேற்கிறார் திரௌபதி முர்மு!

Photo of author

By Sakthi

நாட்டின் 15 ஆவது குடியரசு தலைவராக திரௌபதி முர்மு இன்று பதவியேற்க்கிறார். இதற்காக நாடாளுமன்றத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. ஒடிசாவில் உபுர்பேடா என்ற கிராமத்தில் பிறந்து கவுன்சிலராக தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்து சட்டசபை உறுப்பினர், அமைச்சர், ஆளுநர் என படிப்படியாக உயர்ந்து தற்போது நாட்டின் 15 வது குடியரசு தலைவராக திரௌபதி முர்மு இன்று பதவி ஏற்கவிருக்கிறார்.

இந்த தேர்தலில் 64 சதவீத வாக்குகளை பெற்று எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை வீழ்த்திய தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு நாடு விடுதலையடைந்த பிறகு பிறந்த முதல் குடியரசுத் தலைவர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார்.

நாடாளுமன்றம் மைய்ய மண்டபத்தில் இன்று காலை பதவியேற்க இருக்கின்ற திரௌபதி முர்மு காலை 9.17 மணியளவில் நாடாளுமன்றத்தில் வடக்கு முற்றத்திற்கு வருகை தருகிறார். அவர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களால் வரவேற்கப்படுகிறார். அதன் பிறகு காவேரி அறைக்கு இருவரும் அழைத்துச் செல்லப்படுவார்கள்.

காலை 9:42 மணி அளவில் காவிரி அறையிலிருந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் அந்தப் பதவியை ஏற்கவிருக்கும் திரௌபதியும் தர்பார் மண்டபத்திற்கு வருகை தருவார்கள். சரியாக 9:49 மணியளவில் குடியரசுத் தலைவரின் பாதுகாவலர்களின் மரியாதையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொள்வார்.

அதன் பிறகு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் ராம்நாத் கோவிந்தும், திரௌபதி முர்முவும், அமர்வார்கள் காலை 9.50 மணியளவில் வடக்கு முற்றத்திலிருந்து நாடாளுமன்ற மைய மண்டபத்திற்கு குடியரசுத் தலைவரின் மனைவி சவிதா செல்வார் என்று சொல்லப்படுகிறது.

சரியாக 10.03 மணி அளவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும், திரௌபதி அவர்களும், பாரம்பரிய வாகன அணிவகுப்பில் நாடாளுமன்றத்தின் 5வது நுழைவாயிலுக்கு வருவார்கள். அவர்களை மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா உள்ளிட்டோர் வரவேற்பார்கள்.

காலை 10.05 மணியளவில் நாடாளுமன்றம் மைய்ய மண்டபத்திற்கு இருவரும் அழைத்துச் செல்லப்படுவார்கள். காலை 10.11 மணியளவில் குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு தேர்வு செய்யப்பட்டது குறித்து தேர்தல் ஆணையம் அனுப்பிய தகவலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் அனுமதி கூறிய பிறகு உள்துறை செயலாளர் அறிவிப்பார் என்று சொல்லப்படுகிறது.

சரியாக காலை 10.14 மணியளவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா திரௌபதி முர்முவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். உடனடியாக ராம்நாத் கோவிந்த் அமர்ந்துள்ள இருக்கையில் திரௌபதி அமர்வார். காலை 10.18 மணியளவில் பதவியேற்பு பதிவேட்டில் குடியரசுத் தலைவர் திரவுபதி கையெழுத்திடுவார்.

அதன் பிறகு 10.23 மணியளவில் நாட்டு மக்களுக்கு திரௌபதி முர்மு தன்னுடைய முதல் உரையையாற்றுவார். அதன் பிறகு குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்று முப்படைகளின் மரியாதையை ஏற்றுக்கொண்டு ராமாத் கோவிந்தை வழியனுப்பும் நிகழ்ச்சியை அவர் பார்வையிடுவார் என்று சொல்லப்படுகிறது.

குடியரசுத் தலைவரின் பதவி ஏற்பு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி, மத்திய அமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், போன்ற முக்கிய நபர்கள் பங்கேற்பார்கள் தமிழகத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.