கொடநாட்டில் பறந்ததாக கூறப்பட்ட ட்ரோன் கேமரா! போலீசாருக்கு கிடைத்த திடீர் தகவல்!
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு எஸ்டேட்டில், காவலாளி கோயம்புத்தூரில் கொலை செய்யப் பட்டதோடு, அந்த பங்களாவில் இருந்த பல பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் சயான், மனோஜ் என 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் முன்னாள் முதல்வர் இறந்த பிறகு நடந்தேறியது.
இந்த வழக்கு விசாரணை பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்டு இருந்த நிலையில், தற்போது இந்த வழக்கில் பல திருப்பங்கள் ஏற்பட்டு உள்ளன. இந்த வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே வழக்கில் திடீர் திருப்பமாக கோர்ட்டு அனுமதி பெற்று சயானை, போலீசார் விசாரணை நடத்தி, ரகசிய வாக்குமூலமும் பெற்றனர்.
இந்த வழக்கு விசாரணைக்கு வரும் பட்சத்தில், பல முக்கிய புள்ளிகள் மாட்டுவார்கள் எனவும் கணிக்கப் படுகிறது. மேலும் ஆட்சி மாற்றத்தை காரணம் காட்டி இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது எனவும், பல மனுக்கள் தரப்பட்டு வருவதும் குறிப்பிடத் தக்கது. அதன் காரணமாக அந்த வழக்கை விரைந்து முடிக்கவும், அங்குல அங்குலமாக விசாரிக்கவும் விசாரணைப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளது.
அதில் இந்த வழக்கில் முக்கிய நபர்களுக்கு தொடர்பு இருப்பது குறித்தும் தகவல் கூறியதாக தெரிகிறது. மேலும் விபத்தில் இறந்த ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் அண்ணன் தனபால் மற்றும் இந்த சம்பவம் நடந்த நாளில் கோத்தகிரி மற்றும் கடலூரில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை ஊட்டி கோர்ட்டில் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கொடநாடு எஸ்டேட்டின் மேல் ஆளில்லா ட்ரோன் விமானம் பறந்ததாக எஸ்டேட் மேற்பார்வை அலுவலர் ராமகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து மூன்று நாட்களாக பறந்துக் கொண்டு இருந்ததாகவும் அவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.