
DMK CONGRESS: தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தற்போது தனது தனி பெரும்பான்மையை இழந்து வருகிறது. கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லாமல் தேர்தலில் வெற்றி பெறுவது இந்த காலகட்டத்தில் சாத்தியமில்லை. அதனால் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்தது போதாதென்று, தமிழக வெற்றிக் கழகத்தையும் கூட்டணியில் சேர்க்க முயற்சித்து வருகிறது. ஆளுங்கட்சியாக திமுகவும் தன்னுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகளை ஒருங்கிணைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.
அந்த வகையில், தேசிய கட்சியான காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்திருக்கும் திமுக மற்ற கட்சிகளை விட காங்கிரஸ் கட்சிக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக சொல்லப்பட்டது.ஆனால் காங்கிரஸோ விஜயுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தகவல் வந்தது.
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை செம்பரபாக்கம் ஏரியில் நீர் திறக்க பட்டதை என்னிடம் ஏன் அறிவிக்கவில்லை, மக்கள் பிரதிநிதிகளிடம் ஒரு வார்த்தை சொன்னால் என்ன என்று நிர்வாகிகளிடம் கடிந்து கொண்டார். இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், செல்வபெருந்தகை போன்ற அரசியல் கட்சி தலைவர்கள் இப்படி நடந்து கொள்வதற்கு வருத்தப்படுகிறேன்.
உண்மை என்னவென்று அறிந்து பேச வேண்டும் என்று கூறியிருந்தார். ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஆட்சியில் பங்கையும், அதிக தொகுதிகளையும் கேட்டு வலியுறுத்து வரும் நிலையில், துரைமுருகன் இவ்வாறு கூறியது, காங்கிரஸுக்கும், திமுகவிற்கும் மேலும் விரிசலை ஏற்படுத்தும் நோக்கில் அமைந்துள்ளது என்ற கருத்தும் நிலவுகிறது. சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளையே அதிகம் சார்ந்திருக்கும் திமுக தலைமைக்கு இது மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் மதிப்பிடப்படுகிறது.
