MMK DMK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. இதற்காக தேர்தல் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. வழக்கம் போல அதிமுகவை திமுகவும், திமுகவை அதிமுகவும் எதிர்த்து வரும் சூழலில் திமுகவுக்கு புதிய எதிரி உருவாகியுள்ளது. தவெகவின் ஆதரவை கண்டு அச்சத்தில் உள்ள திமுகவிற்கு, கூட்டணி கட்சிகள் மேலும் பாதகத்தை ஏற்படுத்தும் வகையில் சில செயல்பாடுகளை செய்து வருகிறது. இத்தனை நாட்கள் அமைதியாக இருந்த திமுக கூட்டணி கட்சிகள் தேர்தல் நெருங்கும் சமயம் பார்த்து அதிக தொகுதிகள், ஆட்சி பங்கு போன்றவற்றை வலியுறுத்தி வருகிறது.
இதனை கூட்டணி கட்சிகள் பொது வெளியில் பேசி வருவதை கண் கூடாக பார்க்க முடிகிறது. பீகார் தேர்தல் முடிவுக்கு முன்பு வரை கூட்டணி கட்சிகளுக்கு நாங்கள் செய்த தியாகம் போதுமென்று நினைக்கிறேம் என்ற கருத்தை காங்கிரஸ் கட்சியினர் முன் வைத்து வந்தனர். ஆனால் தேர்தல் முடிவுக்கு பின் அவர்களின் பேச்சில் மாற்றம் தெரிகிறது. காங்கிரஸ் மட்டுமல்லாது, திமுக கூட்டணியில் பல வருடங்களாக தொடர்ந்து வரும் விசிக நிர்வாகிகள், இந்த முறை அதிக தொகுதிகளை கேட்டு பெறுவோம், அதற்காக எந்த வேலையையும் செய்வோம் என்று கடுமையாக கூறியிருந்தனர்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் எந்த கருத்தும் கூறாமலேயே இருக்கிறார். இந்நிலையில் திமுக கூட்டணியில், நாங்களும் அதிக தொகுதிகள் கேட்போம் எங்களுக்கும் மக்கள் செல்வாக்கு உள்ளது என்ற தோணியில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர், ஜவாஹிருல்லா கூறியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர், நாங்கள் ஒன்றும் திமுக கூட்டணியில் சளைத்தவர்கள் அல்ல, மனிதநேய மக்கள் கட்சியை பொறுத்த வரை சென்ற முறை எங்களுக்கு ஒதுக்கிய 2 தொகுதிகளிலும் 100 % வெற்றியை பதிவு செய்திருக்கிறோம்.
மக்கள் மத்தியில் எங்களுக்கு ஆதரவு உள்ளது. அதனால் இந்த தேர்தலில் கூடுதல் இடங்களை ஒதுக்க வேண்டும் என்பதை நிச்சயமாக வலியுறுத்துவோம் என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து திமுக தலைமைக்கு பேரிடியாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. கூட்டணி கட்சிகள் அனைத்தும் அதிக தொகுதிகளை கேட்டால், திமுக குறைந்த இடங்களில் போட்டியிட நேரிடும் என்ற அச்சம் ஸ்டாலினுக்கு எழுந்துள்ளதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

