TVK: திராவிட கட்சிகளுக்கு இணையாக தமிழகத்தில் ஒரு கட்சி பேசப்படுகிறது என்றால் அது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தான். பெருமளவில் ஆதரவை பெற்ற இந்த கட்சி கரூர் சம்பவத்திற்கு பின் சற்று தொய்வடைந்தது. இதனையடுத்து 1 மாதத்திற்கு பிறகு தவெக சார்பில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டது. மேலும் SIR க்கு எதிரான போராட்டங்கள், உள்ளரங்கு மக்கள் சந்திப்பு என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கரூர் சம்பவத்திற்கு 1 மாதத்திற்கு பின் பழைய நிலைக்கு திரும்பிய தவெகவுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அது தான் மூத்த தலைவர் செங்கோட்டையனின் இணைவு.
இவர் சுமார் 50 ஆண்டு கால அரசியல் அனுபவம் வாய்ந்தவர் மட்டுமல்லாது 8 முறை எம்.எல்.ஏ பதவியையும் வகித்திருக்கிறார். இப்படி இருக்க இவர் புதிய கட்சியான தவெகவில் இணைந்தது தவெகவுக்கு நல் வாய்ப்பாக அமைந்தது. ஏனென்றால் தவெகவுக்கு அரசியல் அனுபவம் இல்லை என பலரும் விமர்சித்து வந்தனர். இதனால் இவரின் வருகை அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்தது. தவெகவில் அவருக்கு உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும், நான்கு மாவட்டங்களுக்கான அமைப்புச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
இவர் மிகவும் மூத்த அரசியல் வாதியாக இருப்பதால், இவரின் ஆலோசனைக்கு விஜய் மற்றும் தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் உடன்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதற்கு எதிர்மாறாக சில செயல்கள் நடந்து வருவதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இவர் விஜய் கட்சியில் சேர்ந்து முழுமையாக 1 வாரம் கூட நிறைவு பெறாத நிலையில் இவரின் கருத்துக்கு எதிராக சில குரல்கள் எழுந்து வருவது தவெக தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என பலரும் கூறுகின்றனர்.

