DMDK AIADMK: அடுத்த வருடம் தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் களம் வேகமெடுத்துள்ளது. இந்த வேகத்தை மேலும் கூட்டும் வகையில் அரசியல் அரங்கில் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறி விட்டன. விஜய்யின் அரசியல் வருகை, திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார், அதிமுகவில் ஏற்பட்ட பிரிவுகள் போன்றவை இதற்கு மிக முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்று பயணத்தையும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற சுற்று பயணத்தையும் தொடங்கி அதனை செயல்படுத்தியும் வருகிறது. திராவிட கட்சிகளுக்கு சற்றும் சளைத்தவர்கள் நாங்கள் இல்லையென்பதை உறுதிப்படுத்தும் வகையில் தேமுதிகவும் இல்லம் தேடி, உள்ளம் நாடி என்ற பிரச்சார பயணத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக நேற்று நடந்த தேமுதிக பிரச்சாரத்தில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பிரேமலதாவை சந்தித்து பேசி, கூட்டணிக்கு அச்சாரமிட்டார். கூட்டணி குறித்து இரு கட்சிகளும் வெளிப்படையாக அறிவிக்காத நிலையில், பிரேமலதாவின் செயல்பாடுகள் அதிமுக-தேமுதிக கூட்டணி உருவானதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இந்நிலையில் தேனி மாவட்டம் போடியில் நடைபெற்ற பரப்புரையில் பேசிய பிரேமலதா, போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி கடந்த 15 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. தற்போது போடு எம்.எல்.ஏ யார் என்று தொண்டர்களிடம் கேட்டார், அதற்கு ஓபிஎஸ் என்று பதில் வந்தது.
பூட்டிய கதவுகள் திறக்கபடவில்லையா? என கூறிய அவர் நமது கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றதும் சட்டமன்ற அலுவலகம் திறக்கப்படும் என்று தெரிவித்தார். இபிஎஸ்க்கு எதிராக உள்ள ஓபிஎஸ்யை நேரடியாக விமர்சனம் செய்ததால், பிரேமலதா அதிமுக கூட்டணியில் இணைந்து விட்டார் என்பதற்கு சான்றாகவே பார்க்கப்படுகிறது. மேலும் தேமுதிக-அதிமுக கூட்டணி பேச்சு வார்த்தையின் போது போடி தொகுதியை தேமுதிகவிற்கு ஒதுக்குவதாக இபிஎஸ் முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 2011 முதல் தற்போது வரை போடி தொகுதியில் வெற்றி பெற்று வரும் ஓபிஎஸ் இவர்களின் செயலால் கடும் கோபத்தில் உள்ளார் என்று ஓபிஎஸ்யின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

