ADMK DMK: தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக 2026 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிகட்டிலில் அமர வேண்டுமென தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் திமுகவின் கூட்டணி கட்சிகளோ தேர்தல் சமயம் பார்த்து ஸ்டாலினிடம் அதிக தொகுதிகள், ஆட்சியில் பங்கு போன்ற நிபந்தனைகளை முன்வைத்து வருகிறது. விஜய்யின் அரசியல் வருகையிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் திமுகவிற்கு இது பெரும் சவாலாக அமைந்துள்ளது.
இது ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் தேர்தல் நெருங்க நெருங்க அதிமுகவில் பிளவுகள் அதிகரித்து வருகிறது. இதனை சரி செய்ய இபிஎஸ் விஜய் கூட்டணியை சேர்த்து கொள்ளலாம் என்று யூகித்திருந்தார். இவரின் செயல்பாடுகளும் அதனை உறுதிப்படுத்துவது போன்றே அமைந்திருந்தது. ஆனால் விஜய் இதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். தற்போது அதிமுக இருக்கும் நிலையை பார்த்தால் அதற்கு விஜய் உடனான பலம் வாய்ந்த கூட்டணி அவசியம். இல்லையென்றால் அதிமுகவிலிருப்பவர்கள் ஒன்றாக இருக்க வேண்டும். தற்போது அதிமுகவில் இது இரண்டும் இல்லையென்பது உறுதியாகிவிட்டது.
இதன் காரணமாக என்ன செய்வதென்று தெரியாமல் யோசித்த இபிஎஸ் கடைசியாக ஒரு முடிவுக்கு வந்துள்ளார் என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. அதிமுகவிலிருந்து முக்கிய தலைகள் பிரிந்து திமுகவில் ஐக்கியமானது போல திமுகவிலிருக்கும் கூட்டணி கட்சிகளை அதிமுக பக்கம் இழுக்கும் பணியை இபிஎஸ் கையில் எடுத்துள்ளாராம். மேலும் திமுக கூட்டணி கட்சியான விசிகவிற்கு 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பதால், அவர்களுக்கு இரட்டை இலக்கத் தொகுதிகள் வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

