A.D.M.K: நீண்ட நாட்களாகவே அதிமுக-வில் பிரிவுகள், தலைமை பிரச்சினை என பல்வேறு நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளன. ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி தினகரன், சசிகலா ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கிய இ.பி.எஸ் தற்போது கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையனையும் பதவிகளில் இருந்து நீக்கியுள்ளார்.
அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டுமென்று செங்கோட்டையன் எடப்பாடி பழனிச்சாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்தார். அந்த கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், செங்கோட்டையன் எந்த விதமான கருத்தும் கூறாமல் இருப்பது இ.பி.எஸ் பாஜக-விடம் பேச்சு வார்த்தை நடத்தி கொண்டிருக்கிறார் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தர்மபுரியில் நடைபெறவிருந்த அதிமுக பிரச்சாரத்தை வானிலை நிலவரத்தை காரணம் காட்டி இ.பி.எஸ் ஒதுக்கி வைத்திருப்பது அவர் டெல்லி செல்வதற்கான அறிகுறி என்றும், அமித்ஷா-விடம் பேச உள்ளதாகவும் தகவல் வெளியானது. இதற்கு பதிலளித்த இ.பி.எஸ் மழை காரணமாக மட்டுமே பிரச்சாரம் தள்ளி வைக்கப்பட்டதே தவிர, நான் டெல்லி செல்கிறேன் மத்திய அமைச்சர்களை சந்திக்கிறேன் என்று கூறுவதெல்லாம் வெறும் வதந்தி என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், துணை முதலமைச்சர் பதவி கொடுத்ததும் சிலர் திருந்தவில்லை என்று ஓ.பி.எஸ்-யை மறைமுகமாக சாடியுள்ளார். எனக்கு ஆட்சியை விட தன்மானமே முக்கியம். கைகூலிகளை வைத்து ஆட்டம் போட்டனர். அவர்கள் இப்போது கண்டெடுக்க பட்டுவிட்டனர். சிலர் அதிமுக-வை அழிக்க பார்த்தார்கள். ஆனால் அது நடக்க நான் விட மாட்டேன்.
அதிமுக உடைய காரணமாக இருந்தவர்களை எப்படி கட்சியில் சேர்க்க முடியும் என்று கூறி இருந்தார். இவர் இவ்வாறு பேசி இருப்பது பிரிந்தவர்களை மீண்டும் இணைக்க முடியாது என்பதில் அவர் திட்டவட்டமாக இருக்கிறார் என்பதை உறுதி செய்துள்ளது.