ADMK TVK: அடுத்த வருடம் தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் அரங்கு மிகவும் விறுவிறுப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. கூட்டணி வியூகங்கள், தொகுதி பங்கீடு, மக்களை சந்திக்கும் பணி என அனைத்தும் பரபரப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மற்ற கட்சிகளை விட அதிமுகவிற்கு இந்த தேர்தல் மிகவும் முக்கியம் என்பதால் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதற்காக தேசிய கட்சியான பாஜக உடன் சுமார் ஒரு வருடத்திற்கு முன்பே கூட்டணி அமைத்து, அதனுடன் சேர்ந்து மூன்றாம் நிலை கட்சிகளை கூட்டணியில் சேர்க்கும் முயற்சியையும் செய்து வருகிறது.
இந்நிலையில் தான் அதிமுகவில் பல்வேறு பிரிவுகள் ஏற்பட்டு அக்கட்சி சிதறுண்டு கிடக்கிறது. இபிஎஸ் அதிமுகவின் பொறுப்பை ஏற்றவுடன் அக்கட்சியிலிருந்து முக்கிய முகங்கள் பலரையும் நீக்கினார். முதலில் ஓபிஎஸ், சசிகலா, தினகரனை நீக்கிய அவர், இறுதியில் எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியான செங்கோட்டையனையும் கட்சியிலிருந்து அடியோடு நீக்கினார். இதனை தொடர்ந்து தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து இன்னும் சில அமைச்சர்கள் விஜய் கட்சியில் இணைய இருக்கிறார்கள் என்று கூறி பரபரப்பை கிளப்பினார். இதற்கான வேலையில் மும்முரமாக ஈடுபட்டுள்ள செங்கோட்டையன் அதிருப்தி அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
மேலும் நேற்று ஈரோட்டில் நடந்த பிரச்சாரத்தில் கூட விஜய் இதனை உறுதிப்படுத்தி இருந்தார். இவ்வாறு எடப்பாடி பழனிசாமியை பதட்டத்திலேயே வைத்திருந்த செங்கோட்டையனுக்கு தற்போது அந்த நிலை ஏற்பட்டிருப்பது போல தெரிகிறது. அந்த வகையில் இபிஎஸ் ஒரு காரியத்தை செய்துள்ளார். உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் மகுடேஸ்வரன் தலைமையில் அக்கட்சியை சேர்ந்த 70 க்கும் மேற்பட்டோர் இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர். இன்னும் சிலர் தவெகவிற்கு வரவிருக்கிறார்கள் என்று செங்கோட்டையன் அனைத்து இடத்திலும் கூறி வந்த நிலையில், தற்சமயம் அதை இபிஎஸ் செய்துள்ளது தேர்தல் களத்தை சூடுபடுத்தியுள்ளது.