ADMK AMMK: தே.ஜ.கூட்டணியிலிருந்து ஓபிஎஸ்-யும், டிடிவி தினகரனும் வெளியேறியதிலிருந்து இருவரும் ஒருவருக்கொருவர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக டிடிவி தினகரன் ஓபிஎஸ்-யை பயன்படுத்தி அதிமுகவையும், பாஜகவையும் வீழ்த்திவிடலாம் என திட்டம் தீட்டி வந்ததாக பேசப்பட்டது. இருவரும் கூட்டணி அமைப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
நயினார் நாகேந்திரன் மீதும், இபிஎஸ் மீதும் தொடர்ந்து கடுமையான தாக்குதலை நடத்தி வந்தார் டிடிவி தினகரன். NDA கூட்டணியிலிருந்து விலகியதற்க்கும் நயினார் நாகேந்திரன் தான் காரணம் என்று கூறினார். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் சேலம் வந்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியை அவரது வீட்டில் சந்தித்தார்.
இந்த சந்திப்பில் கட்சியிலிருந்து நீக்கிய ஓபிஎஸ்யை மீண்டும் கட்சியில் இணைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், அதற்கு சில நிபந்தனைகளுடன் இபிஎஸ் சம்மதம் தெரிவித்தார் என்றும் கூறப்படுகிறது. இந்த முடிவு டிடிவி தினகரனுக்கு எதிரான சதித்திட்டம் என்றும் சொல்லப்படுகிறது.
தினகரனுக்கு ஆதரவாக இருக்கும் ஓபிஎஸ்யை கட்சியில் இணைத்துக் கொண்டால் தினகரன் தனித்து நிற்பார் என்பது தான் இவர்களது திட்டம் என்று அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன. தற்போது ஓபிஎஸ் என்ன பதிலளிப்பார் என்று அவரது நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறார் டிடிவி தினகரன்.
ஏற்கனவே அதிமுக பல அணிகளாக பிரிந்திருக்கிறது, அதோடு அதிமுகவிற்கும், பாஜகவிற்கும் இடையே சச்சரவு நிலவி வருகிறது என்று கூறப்பட்டு வரும் வேளையில் இவர்களின் சந்திப்பில் மேலும் என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.