ADMK BJP: அடுத்த வருடம் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலுக்காக அரசியல் அரங்கு மிகவும் பரபரப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. எந்த ஒரு கட்சியும் கூட்டணி இல்லாமல் ஆட்சிக்கு வர முடியாது என்பதால் அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையில் மும்முரம் காட்டி வருகின்றன. அதிமுகவிற்கு இந்த தேர்தல் மிகவும் முக்கியம் என்பதால் மற்ற கட்சிகளை விட இந்த கட்சி அதிக வேகமெடுத்துள்ளது என்றே கூறலாம். அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைந்திருந்தாலும், அதன் செயல்பாடுகள் அத்தனையும் பாஜக தான் வழி நடத்தி வருகிறது.
அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனை தொடங்கி, கூட்டணி முடிவுகள், தொகுதி பங்கீடு என எல்லாவற்றையும் பாஜக தான் கண்காணித்து வருகிறது. இதனால் அதிமுக பாஜக கட்டுப்பாட்டில் தான் இயங்கி வருகிறது என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன. இதனால் இபிஎஸ் மிகவும் ஆத்திரத்தில் இருந்தார் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இன்று நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக தலைமையில் அமையும் கூட்டணி முடிவுகளை எடுக்கும் முழு உரிமை எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் பல்வேறு விஷயங்களை பாஜகவிற்கு தெரியப்படுத்தியுள்ளது என்பது தெளிவாகியுள்ளது. அதில் முக்கியமானது, ஓபிஎஸ், தினகரன் போன்றார் அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணியில் சேர்வதற்கு இபிஎஸ்யின் சம்மதம் அவசியம் என்பதும், எந்த ஒரு கட்சி கூட்டணியில் சேர்வதாக இருந்தாலும் அது அதிமுகவின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்றும் மறைமுகமாக கூறப்பட்டுள்ளது. மேலும், அதிமுகவின் உட்கட்சி பிரச்சனைகள் இனிமேல் பாஜகவிடம் எடுத்து செல்லபடாது என்பதும் இதன் மூலம் தெரியவந்துள்ளது.

