அதிமுக பொதுக்குழுவில் குழப்பங்களை தவிர்க்க புதிய யுக்தியுடன் களமிறங்கும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு!

Photo of author

By Sakthi

வருகின்ற 11ஆம் தேதி நடைபெறவிருக்கின்ற அதிமுக பொதுக்குழுவில் குழப்பங்களை தவிர்க்க ஹைடெக்காக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு களமிறங்கியிருக்கிறது.

கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் முதல் முறையாக புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்ட நிலையில், இந்த முறை கூடுதலாக RFID தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பொதுக்குழு உறுப்பினர்களை பரிசோதனை செய்த பிறகு தான் ஒவ்வொரு உறுப்பினரும் பொதுக்குழு நடைபெறும் இடத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது.

பொதுக்குழு அல்லாத உறுப்பினர்கள், வேறு நபர்கள், உள்ளிட்டோர் உள்ளே நுழைவதை தவிர்க்கும் விதத்தில் அதிமுக தலைமை இந்த ஏற்பாட்டை செய்திருக்கிறது.

பொதுக்குழுவில் பங்கேற்பதற்கு 2,665 உறுப்பினர்களுக்கு தனித்தனியே அழைப்பிதழ் வழங்கப்பட்டிருக்கின்ற நிலையில், புகைப்படம் QR SCAN குறியீடு கொண்ட அடையாள அட்டை அச்சிடும் பணி ஆரம்பமாகியது.

அந்தந்த மாவட்ட செயலாளர்கள் மூலமாக பொதுக்குழு நடைபெறவுள்ள முந்தைய நாள் இரவு அடையாள அட்டை விநியோகம் செய்யப்படவுள்ளது.

இப்படி அதிமுக பொதுக்குழுவில் குழப்பங்களை தவிர்ப்பதற்காக ஹைடெக்காக எடப்பாடி பழனிச்சாமி தரப்பை சார்ந்தவர்கள் களமிறங்கியிருக்கிறார்கள்.

ஒபிஎஸ்சுக்கு பின்னடைவு

வருகின்ற 11ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கின்ற நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு பன்னீர்செல்வத்தின் தரப்புக்கு பின்னடைவை ஏற்படுத்திருக்கின்ற நிலையில் அதனை முழு மனதுடன் ஏற்றுக் கொள்வதாக அவருடைய ஆதரவாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படாத புதிய தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி. கிருஷ்ண முராரி, உள்ளிட்டோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது உட்கட்சி விவகாரங்களில் சென்னை உயர்நீதிமன்றம் தலையிட்டது சட்டத்திற்கு விரோதமானது என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வாதிட்டது.

ஆனால் உட்கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தீர்வு காண முடியும் என்று பன்னீர்செல்வம் தரப்பு தெரிவித்தது. இதனை தொடர்ந்து கட்சி விவகாரங்களில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தார்கள்.

அதோடு நட்பு ரீதியில் தீர்வு காண வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் தரப்புக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

சென்ற 23ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு தொடர்பான நீதிமன்ற உத்தரவு மற்றும் அவமதிப்பு வழக்கிற்கும் இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், ஏதாவது நிவாரணம் தேவைப்பட்டால் பன்னீர்செல்வம் உயர்நீதிமன்ற தனி நீதிபதியை நாடலாம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

அதிமுகவின் பொதுக்குழு தொடர்பாக எந்த உத்தரவையும் பிறபிக்கப் போவதில்லை என்று தெரிவித்த நீதிபதிகள், வழக்கை ஒத்தி வைத்தனர்.

உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து வருகின்ற 11ஆம் தேதியன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் சிறப்பாக நடைபெறும் என்று முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்திருக்கிறார்