
ADMK DMK: மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கட்சியின் 54 வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் முனிச்சாலை பகுதியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, திமுக மற்றும் தமிழக அரசை சாடினார். அவர் தனது உரையில், அதிமுக கடந்த 31 ஆண்டுகளில் சாதாரண மக்களுக்கும், பட்டியல் இனத்தவர்களுக்கும் பதவி வழங்கி சமத்துவத்தை நிலைநிறுத்தியது.
பெண்களுக்கு உரிய உரிமை அளித்தது இந்த கட்சி தான். திமுகவிலிருந்து பிரிந்து உருவான அதிமுக இன்று இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக உயர்ந்துள்ளது என்றார். அதிமுக ஆட்சியில் எதுவும் செய்யப்படவில்லை என ஸ்டாலின் கூறுவது பொய். வைகை கரையில் சாலை அமைத்ததும், 170 கோடி மதிப்பிலான கோரிப்பாளையம் சந்திப்பு பாலத்திட்டத்தையும் வடிவமைத்ததும் அதிமுக ஆட்சிதான். ஆனால் திமுக அரசில் அது இன்னும் நிறைவேறவில்லை.
மதுரை மாநகராட்சி அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் ஒரு ஆண்டு போராடி 200 கோடி சொத்து வரி ஊழலை வெளிக்கொண்டு வந்தனர் என்றார். மேலும் அவர், திமுக ஆட்சியில் கல்யாண மண்டபங்கள், வீடுகளுக்கு அநியாயமான வரி விதிக்கப்பட்டது. அதன் விளைவாக மேயர் இந்திராணி ராஜினாமா செய்ய நேரிட்டது. மேயரின் கணவர் உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டனர்.
இரண்டு வாரங்களாகியும் புதிய மேயரை தேர்வு செய்ய முடியாத திமுக இரண்டு அமைச்சர்கள் இருந்தும் செயலிழந்துள்ளது. 2026-ல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அது நாட்டுக்கே ஆபத்து என்றும் கூறினார். அவர் கடைசியாக, அதிமுக கூட்டணிக்காக ஒருவரையும் வற்புறுத்தாது. எங்கள் கொள்கைகளுக்கு இணங்க யார் வந்தாலும் வரவேற்போம் என்றும் தெரிவித்தார்.
