ADMK: தமிழக அரசியல் களம் தற்போது பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது. இத்தனை வருடங்களாக அதிமுக-திமுக என இருந்த அரசியல் களம் தற்போது தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி என மாறியுள்ளது. இதனால் இந்த முறை தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதனை பின்னுக்கு தள்ளும் விதமாக அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிசாமியால் வெளியேற்றபட்ட ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா, செங்கோட்டையன் நால்வரும் புதிய அணியாக உருவெடுத்துள்ளனர்.
மேலும் மீண்டும் அம்மா ஆட்சியை கொண்டு வருவோம், துரோகம் வீழ்த்தப்படும் என்றும் சபதம் எடுத்துள்ளனர். இந்த நால்வரின் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது தற்போது அரசியல் களத்தில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இவர்கள் ஒரு புதிய வியூகத்தை கையிலெடுதுள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது. செங்கோட்டையன் ஏற்கனவே கூறியது போல, இபிஎஸ்யால் கட்சியிலிருந்து அடியோடு நீக்கபட்டவர்களை ஒன்றிணைத்து செயல்பட போவதாக தெரிகிறது.
அந்த வகையில் 2017 முதல் இன்று வரை அதிமுகவிலிருந்து இபிஎஸ்யால் 14 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். கே.சி.பழனிசாமி, வைத்தியலிங்கம், ஜே.டி.சி. பிரபாகர், பெங்களூரு புகழேந்தி, ஓ.பி ரவீந்திரநாத், மனோஜ் பாண்டியன், பண்ருட்டி ராமச்சந்திரன், அன்வார் ராஜா, மருது அழகுராஜ், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட பலரும் இவரால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனை பயன்படுத்த நினைக்கும் நால்வர் அணி, இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் பணியில் ஈடுபட போகிறதாம்.
இதில் அண்மை காலமாக இபிஎஸ்யை கடுமையாக சாடி வரும் பெங்களூரு புகழேந்தி ஏற்கனவே இவர்கள் அணியில் இணைய சம்மதம் தெரிவித்து விட்டார் என்று அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த பலர் கூறுகின்றனர். இவர்கள் மூலம் மட்டுமே இபிஎஸ்யை வீழ்த்த முடியுமென்று நால்வர் அணி நினைக்கிறது. மேலும், திமுகவில் இணைந்த அன்வார் ராஜாவும், மருது அழகுராஜும் இவர்களின் கூட்டணிக்கு மீண்டும் வருவார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

