ரவி அஷ்வினின் சிறப்பான பேட்டிங்! சாம்பியன் பட்டத்தை வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ்! 

Photo of author

By Sakthi

ரவி அஷ்வினின் சிறப்பான பேட்டிங்! சாம்பியன் பட்டத்தை வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ்!
இந்த வருடத்திற்கான டிஎன்பிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் ரவி அஷ்வின் அவர்களின் சிறப்பான பேட்டிங்கால் லைகா கோவை கிங்ஸ் அணியை வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதல் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
டிஎன்பிஎல் என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரீமியர் கிரிக்கெட் லீக் தொடரின் இறுதிப் போட்டி நேற்று(ஆகஸ்ட்4) நடைபெற்றது. இறுதிப் போட்டியில் ஷாரூக் கான் தலைமையிலான லைகா கோவை கிங்ஸ் அணியும் ரவி அஷ்வின் தலைபமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதியது.
சென்னையில் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் டாஸ் வென்று திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து லைகா கோவை கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
முதலில் பேட்டிங் செய்த லைகா கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் சேர்த்தது. லைகா கோவை கிங்ஸ் அணியில் அதிகபட்சமாக ராம் அர்விந்த் 27 ரன்களும், அதீக் உர் ரஹ்மான் 25 ரன்களும், சுஜய் 22 ரன்களும் சேர்த்தனர்.
திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் சிறப்பாக பந்து வீசி வருண் சக்கரவர்த்தி, பி விக்னேஷ், வாரியர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். சுபோத் பாட்டி ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு 130 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
குறைவான இலக்கை நோக்கி களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்கள் ஷிவம் சிங் 4 ரன்களிலும், விமல் குமார் 9 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.
இதன் பின்னர் களமிறங்கிய ரவி அஷ்வின் பொறுமையாக விளையாடத் தொடங்கினார். இவருடன் இணைந்த பாபா இந்திரஜித் நிதானமாக ரன் சேர்க்க தொடங்கினார். மிகவும் நிதானமாக விளையாடிக் கொண்டிருந்த பாபா இந்திரஜித் 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷாரூக் கான் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்து சென்றார்.
இதையடுத்து களமிறங்கிய சரத்குமார் அவர்கள் ரவி அஷ்வின் அவர்களுடன் இணைந்து விளையாடி பொறுமையாக ரன் சேர்க்கத் தொடங்கினார். தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டிருந்த ரவி அஷ்வின் அரை சதம் அடித்து 52 ரன்கள் சேர்த்த நிலையில் யுதீஸ்வரன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
பின்னர் நிதானமாக விளையாடிய சரத்குமார் வெற்றிக்கு தேவையான ரன்களை எடுத்துக் கொடுத்து திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை இறுதிப் போட்டியில் வெற்றி பெற வைத்தார். இதனால் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 18.4 ஓவர்களில் இலக்கை அடைந்து 131 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலமாக திண்டுக்கல் டிராகன்ஸ் அணி டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் தன்னுடைய முதல் சாம்பியன் ஷிப் பட்டத்தை வென்றுள்ளது. 52 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு வித்திட்ட ரவி அஷ்வின் அவர்கள் ஆட்டநாயகன் விருதையும் தொடர் முழுவதும் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் சிறப்பாக விளையாடிய ஷாரூக் கான் அவர்கள் தொடர் நாயகன் விருதையும் வென்றார்.