தமிழக மக்களிடையே இருக்கும் அமைதியை சீர்குலைக்க நினைக்கும் யாரையும் சும்மா விடாதீங்க! டிடிவி தினகரன் ஆவேசம்!

Photo of author

By Sakthi

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக ஒரு சில பகுதிகளில் சில மர்ம நபர்கள் பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர்கள், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரமுகர்கள் அதோடு இந்து முன்னணி நிர்வாகிகளின் வீடு, கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் மீது குண்டுகள் வீசப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பொதுமக்களிடையே ஒருவித அச்சமும், பதற்றமும் உண்டாகியுள்ளது.

இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது. இது தொடர்பாக அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள் கடுமையான கட்டணத்தை பதிவு செய்ததுடன் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை முறையாக பராமரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து குற்றவாளிகளை கைது செய்து சரியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இப்படியான சூழலில் திமுக ஆட்சிக்கு வந்தாலே குற்ற செயல்களும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படுவதை கடந்த காலங்களில் நாம் பார்த்து வந்திருக்கிறோம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இன்று அவர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள வலைதள பதிவில் தொடர்ச்சியான பெட்ரோல் குண்டு வீச்சு போன்ற சம்பவங்களால் தமிழகத்தின் அமைதியான சூழ்நிலை பறிபோய் விடுமோ என்ற பயமும், பதற்றமும் பொதுமக்களிடையே உண்டாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும் குற்ற செயல்களும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படுவதை கடந்த காலங்களில் நாம் கண்கூடாக பார்த்து வந்திருக்கிறோம் தற்போதும் அதுதான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அமைதியை சீர்குலைக்க நினைக்கும் எந்த ஒரு சக்தியையும் அனுமதிக்காமல் காவல்துறையினர் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என டிடிவி தினகரன் தன்னுடைய வலைதளப் பதிவின் மூலமாக கோரிக்கை வைத்துள்ளார்.