100 ஆடுகள் வெட்டி விருந்து வைக்கும் திருவிழா! ஆண்கள் மட்டும் 10000 பேர் கலந்து கொண்டதாக தகவல்!!

Photo of author

By Sakthi

100 ஆடுகள் வெட்டி விருந்து வைக்கும் திருவிழா! ஆண்கள் மட்டும் 10000 பேர் கலந்து கொண்டதாக தகவல்!!

 

ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் திருவிழாவில் 100 ஆடுகள் வெட்டப்பட்டு விருந்து வைக்கப்பட்டது. இந்த விருந்தில் 10000 ஆண்கள் கலந்து கொண்டு விருந்தை சிறப்பித்ததாக தகவல் கிடைத்துள்ளது.

 

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சொர்க்கம்பட்டியில்  காவல் தெய்வமான கரும்பாறை முத்தையா கோவில் உள்ளது. இந்த கோவிலில் தான் ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளும் பாரம்பரிய திருவிழா நடந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் நடைபெறும். ஆனால் இந்த முறை ஆனி மாதம் நடந்துள்ளது.

 

ஆண்கள் மட்டும் பங்கேற்கும் இந்த திருவிழாவில் பெண் குழந்தைகள் முதல் வயதான மூதாட்டிகள் வரை இந்த பாரம்பரிய திருவிழாவில் பங்கேற்க அனுமதி கிடையாது. இந்த கோவிலில் பலியிடப்படும் ஆடுகள் இந்த கோவிலில் வளர்க்கப்படுகின்றது. இந்த ஆடுகள் மேய்ச்சலுக்காக வயல்வெளிகளிலும் விளை நிலங்களிலும் உணவுக்காக ஆடுகள் மேயும் பொழுது யாரும் விரட்டமாட்டார்கள் என்று கூறப்படுகின்றது. முத்தையா சாமியே விளை நிலங்களில் வந்து உணவு தேடுவதாக மக்கள் நம்புகிறார்கள்.

 

இந்த ஆண்டு கரும்பாறை முத்தையா கோவில் திருவிழா இன்று(ஜூன் 17) காலை நடைபெற்றது. காலை 8 மணிக்கு பொங்கல் வைக்கப்பட்டு வழிபாட்டை தொடங்கிய பின்னர் நேர்த்திக்கடனாக வளர்க்கப்பட்ட 100 ஆடுகள் பலியிடப்பட்டு உணவுகள் சமைக்கப்பட்டது. 250 மூட்டை அரிசியில் உணவு தயாரன பின்னர் கறிக் குழம்புடன் அங்கு கூடியிருந்த 10000க்கும் மேற்பட்ட ஆண்களுக்கு வழங்கப்பட்டது.

 

வாழை இலை போட்டு சாப்பாடும் கறிக்குழம்பும் ஆண்களுக்கு பறிமாறப்பட்டது. அவர்கள் சாப்பிட்டு முடித்த பின்னர் இலையை எடுக்காமல் அப்படியே விட்டுச் செல்வது வழக்கமாக உள்ளது. ஒரு வாரத்திற்கு பிறகு இலைகள் காய்ந்த பிறகுதான் தரிசனத்திற்கு  பெண்கள் அனுமதிக்கப்படுவர்.

இன்று நடந்த கறிவிருந்தில் மதுரை மாவட்டத்தில் திருமங்கலம், சொர்க்கம்பட்டி, பெருமாள்கோவில்பட்டி, குண்ணனம்பட்டி, கரடிக்கல், மாவிலிபட்டி, செக்காணூரனி, சோழவந்தான் உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த ஆண்கள் கலந்துகொண்டனர்.

 

ஜாதி, மதம், இனம் வேறுபாடின்றி சமூக நல்லிணக்கத்திற்காக கொண்டாடப்படும் இந்த திருவிழாவில் குழந்தை வரம், வேலை வாய்ப்பு, உடல் ஆரோக்கியம் மற்றும் பல வேண்டுதலுக்கு கறுப்பு நிறத்தில் உள்ள வெள்ளாடுகளை நேர்த்திக் கடனாக செலுத்துவது வழக்கமாக இருக்கின்றது.