தனியார் மருத்துவமனையில் தீ விபத்து! 3 பேர் பலி

Photo of author

By Ammasi Manickam

ர‌ஷியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள ஜெலெனோடோல்க் நகரில் தனியார் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு தீடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த மருத்துவமனையில் உள்ள இதய நோயாளிகள் சிகிச்சை பெறும் பிரிவில் தான் இந்த தீ விபத்து ஏற்பட்டது.

திடீரென்று ஏற்பட்ட இந்த தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிந்து கண் இமைக்கும் நேரத்தில் மருத்துவமனை முழுவதிலும் பரவியது.இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது.

மேலும் இந்த ஆஸ்பத்திரியில் பணி புரியும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் நோயாளிகள் என அனைவரும் அலறியடித்தபடி ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறினர். ஆனாலும் இந்த தீ விபத்தில் சிக்கி 3 நோயாளிகள் உடல் கருகி உயிரிழந்தனர்.

இந்த தீவிபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி மருத்துவமனையில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். மேலும் இந்த தீ விபத்தில் 2 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர் என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக கடந்த 13 ஆம் தேதி செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் ஒரு மருத்துவமனையில் இதேபோல ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் கொரோனா நோயாளிகள் 5 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.