முதல் பச்சை பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டது! மிகவும் ஆபத்தான தொற்று என  மருத்துவர்கள் கருத்து!

Photo of author

By Hasini

முதல் பச்சை பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டது! மிகவும் ஆபத்தான தொற்று என  மருத்துவர்கள் கருத்து!

கொரோனாவின் இரண்டாம் நிலை பாதிப்பு உலக மக்களிடையே பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திவரும் நிலையில், அதை தொடர்ந்து பல்வேறு நோய்களும் தொடர்ந்து மக்களை அச்சுறுத்தல்களுக்கு ஆட்படுத்திக் கொண்டு உள்ளது.

கொரோனா வந்தவர்களின் உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைந்துள்ளதால் இதுபோன்று பாதிப்புகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், முதன் முதலில் கருப்பு பூஞ்சை நோய் ( மியூகோமிகோசிஸ் ) மக்களை பாதித்தது.

மேலும் அதைத் தொடர்ந்து வெள்ளை பூஞ்சை மற்றும் மஞ்சள் பூஞ்சை நோய்களும் மக்களை தாக்கிய வண்ணம் இருந்தது. கரும் பூஞ்சை தொற்று காரணமாக பலர் கண் பார்வை இழந்தது அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது.

வெள்ளை பூஞ்சையானது அதைபோல் அல்லாமல், நுரையீரல், சிறுநீரகம், குடல், வயிறு, பிறப்புறுப்பு மற்றும் நகங்கள் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளுக்கு மிக எளிதாக பரவி பாதிப்புகளை ஏற்படுத்துவதாக  மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சைகளை தொடர்ந்து மஞ்சள் பூஞ்சை மக்களை தொற்ற ஆரம்பித்தது. இந்த தொற்று மற்ற இரண்டையும் விட மிக ஆபத்தானது என மருத்துவர்களால் கூறப்பட்டது.

இந்த தொற்று ஏற்படுவோருக்கு அதீத சோர்வு, பசியின்மை ஏற்பட்டு அதன் மூலம் உடல் எடை குறைவு, உள்ளே ரத்தம் கசியும் மற்றும் உடல் உறுப்புகள் செயல் இழப்பு போன்றவை நேரும்.மேலும், ஒருவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்றும் கூறப்பட்ட நிலையில் தற்போது அதற்கடுத்த தொற்றாக பச்சை தொற்று பரவ ஆரம்பித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரில் 34 வயதுடைய நபருக்கு பச்சை தொற்று நோய் காணப்படுகிறது. இவரே நாட்டின் முதல் பச்சை தொற்று நோயாளி ஆவார். இவர் மும்பையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விஷால் ஸ்ரீதர் என்ற நபர் மாணிக் பாக் நகரில் வசித்து வருகிறார். இவர் சில தினங்களுக்கு முன் கொரோனா காரணாமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு குணமடைந்த பின் வீடு திரும்பி விட்டார்.

ஆனாலும் உடல்நிலை திரும்பவும் மோசமடைந்ததால் மருத்துவமனையிலேயே அனுமதிக்கும் நிலை ஏற்பட்டது. அப்போது அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு சைனஸ்கள், நுரையீரல் மற்றும் இரத்தத்தில் பச்சை பூஞ்சை (அஸ்பெர்கில்லோசிஸ்) தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதிகமான காய்ச்சல், மூக்கு வழியே ரத்தம் கசிவது ஆகியவை தான் இதன் அறிகுறிகள்.

இந்த அறிகுறிகள் காரணமாக அவருக்கு காய்ச்சல் 103 டிகிரிக்கு கீழ் குறையவே இல்லை என்றும், மேலும் நுரையீரலில் 90 சதவிகித தொற்று பாதித்தது தெரிய வந்தது. இவரே இந்த தொற்றுக்கு முதல் நோயாளி என்பதால் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்து பார்த்தால் தன் தெரியும் என்றும் கூறுகிறார்கள்.