முப்படை தளபதி மற்றும் ராணுவ வீரர்களின் உடலுக்கு முதல் அமைச்சர் மரியாதை!
நேற்று குன்னூரில் இருந்து வெலிங்டன் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் மேக மூட்டத்தின் காரணமாக மரத்தில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. அதில் பயணம் செய்த முப்படை தளபதி மற்றும் அவரது மனைவி மற்றும் சக ராணுவ வீரர்களும் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அங்கு விபத்து ஏற்பட்டதை அடுத்து அதில் இருந்த 13 பேரும் உடல் எரிந்து உயிரிழந்து விட்டனர். எனவே அவர்களின் உடல்கள் இன்று வெலிங்டன் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின் இன்று காலை 10:40 மணி அளவில் மருத்துவமனையிலிருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தின் மூலம் அவர்களின் உடல்கள் வெலிங்டன் ராணுவ மையத்திற்கு கொண்டு வரப்பட்டன.
விபத்தில் உயிரிழந்த வீரர்களின் உடல்களுக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். துக்கம் அனுசரிக்கும் வகையில் ஒரு கருப்பு துண்டு அணிந்த படி ராணுவ அதிகாரிகளின் உடலுக்கு வீரவணக்கம் செலுத்தினார். அதைத் தொடர்ந்து ராணுவ அதிகாரிகள் பலரும் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.