தலைநகரில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து கடைகள் முற்றிலும் நாசம்!

Photo of author

By Hasini

தலைநகரில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து கடைகள் முற்றிலும் நாசம்!

கொரோனா இரண்டாம் அலையின் வேகம் தற்போது சற்று குறைந்து உள்ளதால் தொற்று குறையாத மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் ஊரடங்கில் தளர்வுகள் செய்யப்பட்டு உள்ளது.

அதே போல், தலைநகர் டெல்லியில் கொரோனா 2-வது அலையின் பாதிப்பு சற்று குறைந்ததால் சில விதிமுறைகளை பின்பற்றி அனைத்து கடைகளையும் திறக்க கடந்த வாரம் அரசு அனுமதி வழங்கியது. இதனால் டெல்லியில் தற்போது இயல்பு வாழ்க்கை மெல்ல திரும்பி வருகிறது.

இந்த நிலையில், டெல்லி லாஜ்பத் நகர் கடைவீதியில் உள்ள துணிக்கடை ஒன்றில் நேற்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அங்கே கடைகள் தொடர்ந்து ஒரே வரிசையில் இருப்பதால் மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ கண்ணிமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்த கடைகளுக்கும் பரவியது. இதனால் அப்பகுதியே கரும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

இதனிடையே தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் 30 தீயணைப்பு வாகனங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.‌

அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதன் மூலம் துணிக்கடைகளின் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. எனினும் இந்த தீ விபத்தில் 5 துணிக்கடைகள் எரிந்து நாசமாகின. அதேசமயம் இந்த தீ விபத்தால் உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயமோ ஏற்படவில்லை.