கோவையிலிருந்து அபுதாபிக்கு விமான சேவை! இண்டிகோ நிறுவனம் அதிரடி அறிவிப்பு!
கோவையில் இருந்து அபுதாபிக்கு நேரடியாக விமான சேவை இயக்கப்படவுள்ளதாக விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான இன்டிகோ நிறுவனம் தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கோவையில் சர்வதேச விமான சேவையை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இன்டிகோ நிறுவனம் கோவையிலிருந்து அபுதாபிக்கு இந்த புதிய விமான சேவையை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த சர்வதேச விமான சேவைக்கு விமானப் போக்குவரத்து இயக்குனரகம் ஒப்புதல் வழங்கியதை அடுத்து கோவை சர்வதேச விமான நிலையத்திலிருந்து அபுதாபி சர்வதேச விமான நிலையத்திற்கு வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் விமான சேவையை இயக்க இன்டிகோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த புதிய விமான சேவை வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதையடுத்து கோவையில் இருந்து பகல் 7.30 மணிக்கு புறப்படும் விமானம் பிற்பகல் 11.30 மணிக்கு அபுதாபி சென்றடையும் என்றும் மறுமார்க்கத்தில் அபுதாபியில் மதியம் 1 மணிக்கு கிளம்பும் விமானம் மாலை 6.30 மணிக்கு கோவையை வந்தடையும் என்றும் கூறியுள்ளது.
இதுவரை துபாய் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு மட்டுமே சர்வதேச விமான சேவை இருந்து வந்தது. தற்பொழுது இன்டிகோ நிறுவனம் சார்பில் அபுதாபிக்கு விமான சேவை தொடங்கப்படுவதால் இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரக நாட்டுக்கும் இடையே இருக்கும் விமான சேவையின் தேவையை பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.