DMK ADMK: சமீப காலமாக பெரிய கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் மாற்று கட்சியை நாடியுள்ளனர். நேற்று சேலத்தில் நடைபெற்ற விழாவில் அதிமுகவில் பல்வேறு கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் இணைந்தனர். இது பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது புதிய திருப்பமாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பலரும் திமுகவில் இணைந்துள்ளனர்.
முன்னதாக முன்னாள் எம்பி அன்வர் ராஜா, முன்னாள் எம்பி மைத்ரேயன் போன்றோர் திமுகவில் இணைந்த நிலையில், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஓபிஎஸ் பக்கம் நின்ற மருது அழகுராஜாவும் நேற்று மு.க ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்துள்ளார். இது குறித்து பேசிய அவர், மேலும் பலர் அதிமுகவிலிருந்து பிரிந்து திமுகவில் இணைய போகிறார்கள் என்றும் கூறினார்.
மருது அழகுராஜா திமுகவில் இணைந்த நிகழ்வு அவரது ஆதரவாளர்கள் பலரையும் திமுகவின் பக்கம் ஈர்க்கும் வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கியது அதிமுகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திய நிலையில், அடுத்து யார் யார் திமுகவில் இணைய போகிறார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இபிஎஸ் மீது அதிருப்தியில் இருக்கும் செங்கோட்டையன் திமுகவில் இணைவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. உறுப்பினர்கள் கட்சி மாறுவதை விட கட்சியின் முக்கிய அமைச்சர்கள் மாற்று கட்சி தேடுவது மிகவும் ஆபத்தானதாகும். இந்த சூழ்நிலையில், தமிழக அரசியலில் அடுத்த சில மாதங்களில் முக்கிய மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.