ADMK BJP: அதிமுகவின் மூத்த தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு இந்த கட்சி தனது தனிப்பெரும்பான்மையை இழந்து விட்டது. ஜெயலலிதாவிற்கு பிறகு யார் முதல்வர் பதவியில் அமருவது என்ற பிரச்சனை மேலோங்கி இருந்த நிலையில், பல்வேறு திருப்பங்களுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்வர் இருக்கையில் அமர்ந்தார். இவர் அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்றதிலிருந்ததே அங்கு பிரிவினைகளும், உட்கட்சி மோதலும் ஏற்பட தொடங்கிவிட்டது. அந்த வகையில் முதலில் சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கிய இபிஎஸ், பின்னர் ஒபிஸ்யையும் நீக்கினார். இதனை தொடர்ந்து டிடிவி தினகரன், அண்மையில் செங்கோட்டையன் என பலரும் இபிஎஸ்யால் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதனால் அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என கூறி அதிமுக ஒருங்கிணைப்பு குழு ஒன்றை ஓபிஎஸ் ஆரம்பித்தார். இந்த குழுவில் இபிஎஸ் தலைமையை விரும்பாதவர்களும், அதிமுக பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என நினைத்த முக்கிய அமைச்சர்களும் இடம் பெற்றிருந்தனர். இத்தனை வருடங்கள் ஆன பின்பும் அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணியை இபிஎஸ் மேற்கொள்ளாததால், டிசம்பர் 15 க்குள் இந்த பணியை மேற்கொள்ளவில்லை என்றால் எங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை மிகவும் மோசமானதாக இருக்கும் என ஓபிஎஸ் எடப்பாடி பழனிசாமியை எச்சரித்திருந்தார். இந்நிலையில், யாரும் எதிர்பாராத நேரத்தில் ஓபிஎஸ் டெல்லி சென்றுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவரின் இந்த திடீர் பயணம் அதிமுக ஒருங்கிணைப்பு பற்றியதா, தனிக்கட்சி துவங்க போவது குறித்த ஆலோசனையா, இல்லை விஜய் கட்சியில் சேர்வது தொடர்பான பேச்சு வார்த்தையா என்பது இன்னும் தெரியவில்லை. இது பற்றிய விவாதங்கள் மேலோங்கி வரும் வேளையில், பலரும் இந்த பயணம், அதிமுக ஒருங்கிணைப்பு பற்றியது தான் என்று கூறி வருகின்றனர். செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கிய போது , அதிமுகவின் உள்விவகாரங்களில் பாஜக தலையிட கூடாது என இபிஎஸ் அமித்ஷாவிடம் வாக்குறுதி பெற்றதாக அதிமுக வட்டாரங்கள் கூறி வந்தன. இப்படி இருக்கும் சமயத்தில், ஓபிஎஸ் டெல்லி சென்று ஒருங்கிணைப்பு குறித்து பேச போகிறார் என்ற செய்தி இபிஎஸ்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

