DMK: கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவையில் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற முடியாத திமுக, இந்த முறை அந்த தவறை மீண்டும் செய்யக் கூடாது என முடிவு செய்துள்ளது. 2021-ல் அதிமுக ஆதிக்கம் இருந்த கோவை, தற்போது திமுகவின் கவனப் புள்ளியாக மாறியுள்ளது. இதனால், கோவையை கைப்பற்ற வேண்டும் என்ற இலக்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெளிவாக முன் வைத்துள்ளார். இந்தத் திட்டத்தின் முதல் கட்ட பணிகளை, நீண்ட இடைவெளிக்குப் பிறகு அரசியலுக்கு திரும்பி வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் உள்ள குழு தொடங்கியுள்ளது.
தற்போது கோவையில் கொங்கு வெள்ளாள கவுண்டர், நாயுடு மற்றும் அருந்ததியினர் போன்ற முக்கிய சமூகங்களின் வாக்குகளை உறுதி செய்வதில் அவர் தீவிரமாக உள்ளார். சமூக பிரதிநிதிகள், மதத் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்து, திமுக மீதான நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கடந்த தேர்தலில் திமுகவின் தோல்விக்கு காரணமான வேட்பாளர் தேர்வு போன்ற பல்வேறு அம்சங்களை பரிசீலித்து, அவற்றை சரி செய்யும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவையில் மக்கள் நலத்திட்டங்கள், வேலைவாய்ப்பு முயற்சிகள், மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு திட்டங்கள் போன்றவை திமுக அரசால் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அடுத்த தேர்தலில் கோவை மாவட்டம் திமுகவின் வசம் மாறுமா என்பதே தற்போது கேள்வியாக உள்ளது.

