கல்விக் கடன் முதல் கோயில் மேம்பாடு வரை! நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2024-25 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்!
இன்று(ஜூலை23) நிதியமைச்சர் சீதா ராமன் அவர்கள் 7வது முறையாக பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். தொடர்ந்து 7வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் சீதாராமன் அவர்கள் அதிகமுறை பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறியிருக்கும் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.
* உள்நாட்டு கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயில மாணவர்களுக்கு 10 லட்சம் வரை கல்விக் கடன் வழங்கப்படும்.
* அடுத்த இரண்டு ஆண்டுகளில் 1 கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்தில் ஈடுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
* 10000 உயிரி இடுபொருள் மையங்கள் கூடுதலாக உருவாக்கப்படும். மேலும் நுகர்வு மையங்களுக்கு அருகிலேயே காய்கறிகள் உற்பத்தி செய்வதற்காக பெரிய அளவில் கிளஸ்டர்கள் அமைக்கப்படும்.
* 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். மேலும் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் பிற வாய்ப்புகளை அளிக்க 5 திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது.
* படிப்பை முடித்துவிட்டு வேலையில் சேரும் இளைஞர்கள் அனைவருக்கும் அரசு சார்பாக ஒரு மாத ஊதியம் வழங்கப்படும். EPFO-வில் பதிவு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு 15000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை சம்பளம் மூன்று தவணையாக வழங்கப்படும்.
* இந்தியாவின் கிழக்கில் உள்ள பீஹார், ஆந்திரா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் பயன்பெறும் வகையில் பூர்வோதயா திட்டம் அமல்படுத்தப்படும்.
* விவசாயம் மற்றும் அது சார்ந்த பிற துறைகளுக்கு 1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* இளைஞர்கள் பயன்பெறும் வகையில் இந்தியாவில் உள்ள 500 பெரிய தொழில் நிறுவனங்கள் மூலமாக வேலை வாய்ப்பு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி காலத்தில் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாதம் 5000 ரூபாய் வழங்கப்படும்.
* ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தின் கீழ் 1 கோடி ஏழைகளுக்கு இலவசமாக வீடு கட்டித் தரப்படும்.
* முத்ரா திட்டத்தின் கீழ் சிறுகுறு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடன் தொகை 10 லட்சம் ரூபாயில் இருந்து 20 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படுள்ளது.
* MSME நிறுவனங்களுக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெருக்கடியான நேரங்களில் அந்த தொகை எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கு தரப்படும்.
* காசி விஸ்வநாதர் கோயில், பீகாரின் கயா மற்றும் புத்தகயா கோயில்கள் உலகத் தரத்தில் மோம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* SIDBI வங்கிகள் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இன்னும் அதிகரிக்கப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் புதிதாக 24 SIDBI வங்கிகள் திறக்கப்படவுள்ளது.
* தனியார் நிறுவனங்களுக்கான வழக்குகளை எளிமையாக தீர்த்து வைக்க புதிய தீர்ப்பாயம் அமைக்கப்படும்.