ADMK: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், நாற்று நட்ட கைகளில் மழையில் நனைந்த நெல்லைப் பிடித்தபோது, விவசாயிகளின் துயரத்தை நேரில் உணர்ந்தேன். ஆனால் அந்த நெல்லைப் பிடிக்க வேண்டிய முதல்வர் ஸ்டாலின், மக்களின் வேதனைகளை பாராமல், படக்குழுவினரின் கைகளைப் பற்றிக் கொண்டிருக்கிறார் என்று விமர்சித்தார்.
மேலும் திரைப்படங்களை பார்ப்பதில் தவறு இல்லை என்றாலும், மக்களின் பிரச்சினைகள் குறித்து கவலைப்படாமல், சினிமா உலகில் மூழ்கி, முழுநேர திரைப்பட விமர்சகராக மாறிவிட்டார் இன்றைய பொம்மை முதல்வர் என அவர் கடுமையாக சாடினார். ஜெய்பீம், கூலி, பைசன் போன்ற திரைப்படங்களை பார்த்து கருத்து தெரிவிப்பதில் முதல்வருக்கு நேரம் இருக்கிறது, ஆனால், விவசாயிகள், ஏழை மக்கள் எதிர்கொள்ளும் துயரங்களைப் புரிந்து கொள்ள நேரம் இல்லை எனக் கூறினார்.
தென் தமிழகம் கடும் மழையில் மூழ்கிய போது கூட்டணி பேச்சுவார்த்தைக்காக டெல்லி பறந்தவர் நீங்கள் தான். தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடந்தபோது கூலி படத்தைப் பார்த்தது நீங்கள் தான். இப்போது, நெல் முளைத்து விவசாயிகள் வேதனைப்படும் நேரத்தில் பைசன் திரைப்படம் பார்த்து மணிக்கணக்கில் நேரம் செலவழிப்பது எவ்வளவு பொருத்தம்? என கேள்வி எழுப்பினார்.
மழை மற்றும் புயல் காரணமாக இதுவரை 31 பேர் உயிரிழந்த நிலையிலும், மக்களை காப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். விவசாயிகளின் கண்ணீர், ஏழை மக்களின் வேதனைகளை உணராத இந்த குடும்ப ஆட்சியாளர்களுக்கு விரைவில் மக்களாட்சியின் சக்தி உணர்த்தப்படும் நாள் தூரத்தில் இல்லை என எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

