தமிழகத்தில் இதன் விளைவாக நோய் தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்துவிட்டது! சுகாதாரத்துறை அமைச்சர் பெருமிதம்!

Photo of author

By Sakthi

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டிருக்கின்ற நோய்த்தொற்று கண்காணிப்பு மையத்தை அமைச்சர் சுப்பிரமணியன், ஊரகத் தொழில் துறை அமைச்சர், தா.மோ. அன்பரசன் உள்ளிட்டோர் நேற்றையதினம் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் உடைய உடல்நிலை, அவர்களுக்கு வழங்கப்படும் உணவு முறைகள், தொடர்பாக அவர்கள் கேட்டதாகச் சொல்லப்படுகிறது.

இதனையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவிக்கும்போது, நோய்த்தொற்று சிகிச்சைக்காக தமிழ்நாடு முழுவதும் 1,93,902 படுக்கைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. நோய்தொற்று அதிகரித்தபோதும் மருத்துவமனைகளில் இதுவரையில் 8,912 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 950 படுக்கைகள் இருக்கின்றன, இதை தவிர 350 படுக்கைகள் முன்கள பணிபுரியும் அரசு ஊழியர்கள், காவல்துறையினருக்கு என பிரத்தியேகமாக அமைக்கப்பட்டு இருக்கிறது என கூறினார்.

நோய் தொற்றுக்கு ஆளான எல்லோரும் மருத்துவமனைகளை நாட வேண்டிய அவசியம் இல்லை லேசான அறிகுறி இருப்பவர்கள் மருத்துவ ஆலோசனைக்கு பின்னர் தங்களுடைய வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளலாம். வீடுகளில் இருப்பவர்களை கண்காணிக்க அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் சுகாதாரத்துறையின் செயலாளர் சார்பாக ஆலோசனை வழங்கப்பட்டிருக்கிறது என கூறியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் மேலும் 100 பகுதிகளில் நோய்த்தொற்று சிகிச்சைக்கு என்று சித்த மருத்துவ மையங்கள் ஆரம்பிக்கப்பட இருக்கின்றன, நோய் தொற்று பாதிப்பு உண்டானாலும் உயிரிழப்பை தவிர்ப்பதற்காக தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும். இரண்டு தவணைகள் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் இறப்பின் விளிம்புக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. புதிய வகை நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரே ஆயுதம் தடுப்பூசி தான் என்று அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என கூறியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் 75% சிறுவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருக்கிறது, மிக குறுகிய காலத்தில் இந்த சாதனையை நாம் படைத்து இருக்கிறோம் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையான ஊரடங்கு விதிக்கப்பட்டு இருப்பதன் காரணமாக, நோய் தொற்று பரவல் வேகம் வெகுவாக குறைந்திருக்கிறது. பொதுமக்கள் சுய கட்டுப்பாட்டுடன் ஊரடங்குக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள் என்று அவர் கூறியிருக்கிறார்..