மகளின் ஒற்றை கையை வைத்து இறுதிச்சடங்கு! என்னை போல யாருக்கும் வரக்கூடாது! தந்தை கதறல்!
வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்த தன்னுடைய திருமணமான மகளின் ஒரு கையை மட்டுமே வைத்து இறுதிச்சடங்கு நடத்திய தந்தையின் நிலைமை மிகுந்த சோகத்தையும் மிகுந்த துக்கத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றது.
கடந்த ஜூலை 30ம் தேதி கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் மேப்பாடி, முண்டக்கை, சூரல்மலை ஆகிய கிராமங்கள் அப்படியே மண்சரிவில் சிக்கி நிலத்திற்குள் மூழ்கியது.
கடுமையான இந்த நிலச்சரிவில் 350க்கும் அதிகமான மக்கள் நிலச்சரிவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தொடர்ந்து 6வது நாளாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த நிலச்சரிவில் 1000க்கும் மேற்பட்ட மக்கள் உயிருடன் மீட்கப்பட்டு பாதுகாப்பாக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 500க்கும் அதிகமாகும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
இந்நிலையில் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் தன்னார்வலர்கள் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாப்பிட உணவு, பாத்திரம், பெட்ஷீட் போன்ற பொருட்களை அனுப்பி உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த மகளின் கையை மட்டும் வைத்து இறுதிச் சடங்கு நடத்திய தந்தையின் செயல் பார்ப்போரை கண் கலங்க வைத்துள்ளது.
வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் இராமசாமி என்பவரின் மகள் ஜிசா என்பவர் காணாமல் போனார். இதையடுத்து அவரை. தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. பல்வேறு தேடுதல் முயற்சிகளுக்கு பின்னர் இராமசாமி அவர்களின் மகள் ஜிசாவின் ஒரு கை மட்டுமே கிடைத்தது.
அந்த கையில் ஜிசாவின் திருமண மோதிரமும் அந்த மோதிரத்தில் அவருடைய கணவர் பெயரும் இருந்தது. இதையடுத்து இராமசாமி அவர்கள் இது ஜிசாவின் கை தான் என்று உறுதி செய்தார். மகள் ஜிசா உயிரிழந்துவிட்டார் என்பதை உறுதி செய்த இராமசாமி அவர்கள் மகளின் ஒரு கைக்கு மட்டும் இறுதிச் சடங்கு செய்தார்.
ஜிசாவின் ஒரு கையை வெள்ளைத் துணியால் சுற்றி தகன மேடையில் வைத்து தந்தை இராமசாமி அவர்கள் இறுதிச் சடங்கு செய்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பார்ப்போரின் மனதையும் கண்களையும் கலங்க வைத்துள்ளது.