TVK: நடைபெறவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். அந்த வகையில் புதிதாக உதயமாகியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட தொடங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் கரூரில் தவெகவின் பிரச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இது முடிவடைந்த உடன் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் இறந்ததாக உறுதி செய்யப்பட்டது. தற்போது அது 41 ஆக உயர்ந்துள்ளது. இதனால் விஜய் மீது வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், இது குறித்து நீண்ட நேரமாக விஜய் எந்த பதிலும் அளிக்காமலும், செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு செவி சாய்க்காமலும் இருந்தார். பிறகு தனது ட்விட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்களையும், இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் ரூபாயும் வழங்குவதாக அறிவித்திருந்தார்.
இவரை தவிர தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் யாரும் இதை பற்றி பேசாமல் இருந்தனர். இந்நிலையில் தவெகவை சேர்ந்த ஆதவ் அர்ஜுனா அவருடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, என்னுடைய வாழ்க்கையில் மிக பெரிய துக்கத்தை கடந்த 24 மணி நேரமாக அனுபவித்து வருகிறேன். ஒருவருடைய மரணத்தின் வழி எப்படி இருக்கும் என்பதை 5 வயதிலேயே அறிந்தவன் நான், அந்த வழியை தற்போது மீண்டும் அனுபவித்து வருகிறேன். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும், ஒரு அண்ணனாக, தம்பியாக, மகனாக என்னுடைய இந்த பயணம் இருக்கும் என்றும் மேலும் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.