விக்னங்களை தகர்க்கும் விநாயகர் சதுர்த்தி பூஜை! எவ்வாறு செய்யலாம்? எந்த நேரத்தில் செய்தால் என்ன பலன்?

Photo of author

By Hasini

விக்னங்களை தகர்க்கும் விநாயகர் சதுர்த்தி பூஜை! எவ்வாறு செய்யலாம்? எந்த நேரத்தில் செய்யலாம்?

விக்னங்கள் என்றால் தடைகள் என்று பொருள். தடைகளைத் தகர்க்கும் விநாயகரை தான் விக்னேஸ்வரர் என்று கூறுகிறோம். அவரை முழு முதற்கடவுள் என்றும் கூறுகிறோம். அதன் காரணமாகவே அனைத்து பூஜைகளிளும் அவரது வழிபாட்டை, நாம் மறக்காமல், தவறாமல் செய்து வருகிறோம். அவர் ஒரு குழந்தையைப் போல, அவர் நாம் கேட்கும் எதையும் உடனே கொடுக்கும் வல்லமை கொண்டவர்.

நாம் எதை தந்தாலும் மகிழ்வுடன் அவர் ஏற்றுக் கொள்வார். ஆனாலும் அவரை பூஜை செய்ய இருபத்தோரு இலைகள் சிறப்பாகச் சொல்லப்படுகிறது. அதேபோல இருபத்தி ஓரு பழங்களும்  சிறப்பு உண்டு. எல்லாவற்றிலும் ஒரு சிறப்பு உள்ளது என்றாலும், இருபத்தி ஓரு இலைகள் விநாயகரை பூஜிக்க மிகவும் நல்ல பலன்கள் உள்ளன என்று ஆன்றோர்கள் சொல்கின்றனர்.

அதே போல் மலர்கள் கூட இருபத்து ஓரு வகையில் பயன்படுத்தலாம் என்றும் சொல்கிறார்கள். ஒவ்வொரு பூஜை பொருளுக்கும், இலை, பூ ஆகியவற்றுக்கும் ஒவ்வொரு பலன் உள்ளது. சில  பொருளுக்கு என்ன பலன்கள் தரப்படும் என புராண நூல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலர் அவர் ஒரு குழந்தை தான் எனவே நாம் எதை மகிழ்வுடன் வைத்து செய்தாலும் அவர் மகிழ்ச்சியடைவார் என்றும் கூறுகிறார்கள். எனவே நம்மால் முடிந்ததை நாம் வைத்து பூஜை செய்யலாம்.

அருகம்புல், மாதுளை இலை, நெல்லி இலை, மாமர இலை, ஜாதிமல்லி இலை, மரிக்கொழுந்து, விஷ்ணுகிரந்தி இலை, அகத்தி இலை, துளசி, தாழம்பூ இலை, வில்வ இலை, கண்டங்கத்திரி இலை, எருக்கன் இலை, இலந்தை இலை, அரளி இலை, வன்னி மர இலை, நாயுருவி இலை, முல்லை இலை, தேவதாரு இலை, ஊமத்தை இலை, கரிசலாங்கண்ணி என  இலைகளை பூஜிக்கிறோம். வீடு, மனை வாங்க வேண்டுமானால் ஜாதிமல்லி இலையும், உயர் பதவியும் கிடைக்க வேண்டுமானால் அரச இலையும் கொண்டு பூஜிக்க வேண்டுமாம். மருத இலையில் பூஜை செய்யும் போது குழந்தை பாக்கியம் கிடைக்குமாம்.

அதே போல பழ வகைகளில் மாதுளை கொய்யா, சப்போட்டா, ஆப்பிள், திராட்சை, கரும்பு, விளாம்பழம், நெல்லிக்காய், ஆரஞ்சு, சாத்துக்குடி, மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம் பல்வேறு பழங்களை படைக்கின்றோம். அதிலும் முக்கியமாக பொரி கடலை, கொண்டக்கடலை சுண்டல், கொழுக்கட்டை, எள் உருண்டை, அப்பம் மிக முக்கியமாக பிரதானமாக நெய்வேதியம் செய்கின்றோம்.

அதுவும் இந்த பிலவ வருடம் வரும் விநாயகர் சதுர்த்தி, வெள்ளிக்கிழமை என்பதன் காரணமாக காலை 6 மணி யிலிருந்து 7 மணி வரை சுக்கிர ஹோரையில் விநாயகரை வழிபடுவது மிகுந்த சிறப்பு வாய்ந்தது என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக சாணிப் பிள்ளையார், மஞ்சள் பிள்ளையார், விபூதி பிள்ளையார், அரிசி மாவு பிள்ளையார், குங்கும பிள்ளையார், வெல்ல பிள்ளையார், சந்தன பிள்ளையார் போன்றவற்றை நாமே நம் கையால் செய்து வைத்து நிவேதனம் வைத்து நமக்கு தேவையானவற்றை வழிபட வேண்டும்.

அதிலும் சுக்கிர ஹோரையில் வழிபடும் போது நமது சங்கடங்கள் அனைத்தும் தீர்ந்து, நாம் மேன்மையான வாழ்க்கையை வாழவும், மேலோங்கவும் வழிவகுக்கும் என்று சொல்கிறார்கள். சதுர்த்தி என்பது என்ன? விநாயகரின் பிறந்த தினத்தை தான் நாம் சதுர்த்தி என்கிறோம். இதை வளர்பிறை சதுர்த்தி, மற்றும் தேய்பிறை சதுர்த்தி என்று மாதத்தில் இரண்டு நாட்கள் நாம் செய்தாலும், இந்த ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தி மிகவும் சிறப்பானதாக அனைவராலும் போற்றப்படுகிறது. எப்பேர்பட்டவராக இருந்தாலும் விநாயகரை வீட்டில் வைத்து வழிபடும் போது அனைத்து செல்வங்களும் கிடைக்கும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு இன்னொரு ரகசியம் சொல்லட்டுமா? எதையாவது நினைத்துக் கொண்டு பிள்ளையாருக்கு 21 நாட்கள் தொடர்ந்து 21 சுற்றுகள் சுற்றும் போது நீங்கள் நினைத்தது கண்டிப்பாக நிறைவேறும் கண்டிப்பாக செய்து பாருங்கள். வெற்றி அடையுங்கள்.

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவரணம் சதுர் புஜம்!

பிரசன்ன வதனம் த்யாயேத் சர்ப விக்னோப சாந்திகே!!

முடிந்தால் இதை மனதார சொல்லி வழிபடலாம்.