கொரோனாவுக்கு ரூ.103 இல் ஃபாவிபிராவிர் மாத்திரை: 4 நாட்களில் நல்ல தீர்வு

Photo of author

By Ammasi Manickam

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க, ஃபாவிபிராவிர் என்ற மாத்திரையை வழங்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பானது உலக அளவில் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் இந்த வைரஸ் தாக்குதலிலிருந்து மக்களை பாதுக்கக்க தற்காலிக தீர்வான சமூக விலகலை கடைபிடிக்க பல்வேறு நாடுகளும் அறிவுறுத்தி வருகின்றன.

சமூக விலகல் என்பது தற்காலிக முன்னெச்சரிக்கை நடவடிக்கையே தவிர கொரோனா பாதிப்பை முற்றிலும் இதனால் ஒழிக்க முடியாது என்பதை உணர்ந்த உலக நாடுகள் இதற்கான மருந்து கண்டு பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டவர்களுக்கான சிகிச்சைக்கு ஃபாவிபிராவிர் என்ற மருந்தை அளிப்பதன் மூலமாக நல்ல தீர்வு கிடைப்பதாக மருத்துவத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பை சரி செய்யும் இம்மருந்தை மும்பையைச் சேர்ந்த கிளென்மார்க் பாராமெடிக்கல் நிறுவனம் உற்பத்தி செய்துள்ளது.

முன்னதாக லேசான மற்றும் மிதமான கொரோனா பாதிப்புள்ளவர்களிடத்தில் இந்த நிறுவனம் தயாரித்த ஃபாவிபிராவிர் மருந்தைக் கொடுத்து பரிசோதித்துப் பார்த்ததில் 88 சதவிகிதம் வரை வெற்றி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

“கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ரூ.103ல் மாத்திரை ரெடி; 4 நாட்களில் நல்ல முன்னேற்றம்” - DGCI அனுமதி!

இதனையடுத்து இந்த மாத்திரையை ஃபேவி ப்ளூ என்ற பெயரில் கிளென்மார்க் பாராமெடிக்கல் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த மாத்திரையின் விலையானது ரூபாய் 103 என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் இந்த மருந்துக்கான உற்பத்தி மற்றும் விற்பனைக்கான அனுமதியை நேற்று வழங்கியுள்ளது.

இந்த மருந்து கண்டுபிடிப்பு குறித்து கிளென்மார்க் பாராமெடிக்கல் நிறுவனத்தின் தலைவர் கிளென் சல்தானா கூறுகையில், “தற்போது இந்தியாவில் நிலவும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்த மருந்திற்கு அனுமதி கிடைத்திருப்பது ஆறுதலான விஷயம். மேலும் இம்மருந்தை எடுத்துக் கொள்வதன் மூலம் நான்கு நாட்களில் கொரோனா நோயாளியிடம் நல்ல முன்னேற்றத்தினை காண முடியும்.

குறிப்பாக இது வாய் வழியாக கொடுக்கப்படும் மருந்து என்பதால் கையாள எளிதானது. நாடு முழுவதும் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு விரைவாக இம்மருந்தினை கொண்டு சேர்க்க அரசுடன் இணைந்து செயல்படுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.