நாம் கடவுளைக் காண கோவிலுக்கு செல்வதே நமது மன அமைதிக்காகவும், நமது பிரச்சனைகளுக்கான தீர்வை காண்பதற்காகவும் தான். அவ்வாறு செல்லக்கூடிய கோவிலுக்கு முறைப்படி செல்ல வேண்டும். நமது பிரச்சனைகளுக்கான தீர்வை காண கோவிலுக்கு சென்று, அங்கு ஒரு புதிய பிரச்சினையை நமக்கு ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது.
அந்த வகையில் கோவிலுக்கு செல்லும் பொழுது, நாம் முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய செயல்கள் மற்றும் தவிர்க்க வேண்டிய செயல்கள் என்ன என்பது குறித்து தற்போது காணோம்.
ஒரு சில ஆண்கள் கோவிலுக்கு செல்லும் பொழுது சாட்ஸ் என்று சொல்லக்கூடிய உடையை அணிந்து கொண்டு செல்வார்கள். அவ்வாறு அணிந்து கொண்டு கோவிலுக்கு செல்ல கூடாது. கோவிலுக்கு செல்வதற்கு என பலவிதமான பாரம்பரிய உடைகள் உள்ளன. அவற்றை அணிந்து கொண்டு செல்வதுதான் நல்லது.
கோவிலுக்கு செல்லும் பொழுதே நமது நெற்றியில் திருநீரை வைத்துக்கொண்டு தான் செல்ல வேண்டும். கோவிலில் கொடுக்கக்கூடிய திருநீறையும் நாம் வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் கோவிலில் கொடுக்கக்கூடிய திருநீரை கோவிலின் சுவற்றில் துடைப்பது, கோவிலை அசுத்தப்படுத்துவது கூடாது.
கோவிலுக்கு வெளியே விட்டு வரக்கூடிய செருப்பு எவ்வளவு விலை மதிப்பானதாக இருந்தாலும் கூட, அந்த செருப்பினை குறித்து கோவிலுக்கு உள்ளே நினைத்துக் கொண்டே இருக்கக் கூடாது.
எந்த ஒரு கோவிலுக்கு சென்றாலும் முழுமுதற் கடவுளாகிய பிள்ளையாரை தான் நாம் முதலில் வணங்குவோம். அவ்வாறு வணங்குவதற்கு முன்பாக நமது கை, கால்களை நன்றாக கழுவி விட்டு, அதற்கு பிறகு தான் பிள்ளையாரை வணங்க வேண்டும்.
கோவிலில் உள்ள கொடி மரத்தின் அடியில் மட்டுமே விழுந்து வணங்க வேண்டும். கோவிலில் உள்ள அனைத்து கடவுளையும் வணங்கிய பின்னர், இறுதியாக கோவிலில் உள்ள கொடி மரத்தின் அடியில் விழுந்து வணங்கி விட்டு தான் வீட்டுக்கு வரவேண்டும்.
இந்த கொடி மரத்திற்கு ஆண்கள் அஷ்ட நமஸ்காரத்தையும், பெண்கள் பஞ்ச நமஸ்காரத்தையும் செய்ய வேண்டும். கோவிலில் வாங்கக்கூடிய பிரசாதத்தை கோவிலில் வைக்க கூடாது. அதனை ஏதேனும் ஒரு பேப்பரில் மடித்து வீட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
வீட்டில் நமது கையினால் கட்டிய பூவினையும், தேங்காய், பழத்தையும் கோவிலுக்கு கொண்டு செல்வது மிகவும் சிறந்தது. கோவிலில் அர்ச்சகர் கொடுத்த பூவினை மட்டுமே வாங்க வேண்டும்.
வேறு யாரிடமிருந்தும் பூவினை வாங்கக்கூடாது. அதேபோன்று கோவிலில் கொடுக்கக்கூடிய பூ எதுவாக இருந்தாலும், அப்பொழுதே தலையில் வைத்துக் கொள்வது மிகவும் சிறந்தது.
கோவிலுக்கு தேவையான பொருட்களை நாம் கோவிலுக்கு வாங்கிக் கொடுக்கலாம்.ஆனால் கோவிலில் இருந்து வெளியில் வரும் பொழுது நாம் எந்த ஒரு பொருட்களையும் அதாவது பிரசாதத்தை தவிர வேறு எந்த பொருட்களையும் நமது வீட்டிற்கு எடுத்து வரக்கூடாது.
அதேபோன்று கோவிலில் அர்ச்சகர் கொடுக்கக்கூடிய பூவினை தலையில் வைத்துக் கொண்டு, அதன் பிறகு கைகளை கழுவி விட வேண்டும். அதற்கு பிறகு தான் மற்ற சன்னதிக்கு கடவுளை வணங்க செல்ல வேண்டும்.
கோவிலில் அமர்ந்து ஊர் கதை, உலக கதைகளை பேசுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு பதிலாக தெய்வத்தின் நாமங்களை மனதில் பாராயணம் செய்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அந்த தெய்வத்தின் முழு அருளும் நமக்கு கிடைக்கும்.
கோவில், கோவிலில் வேலை செய்பவர்கள், அங்கு உள்ளவர்கள், அர்ச்சகர்கள் என இதுபோன்ற யாரையும் குறை கூற கூடாது. கோவிலுக்கு உள்ளே நுழையும் பொழுதே அங்கு உள்ளவர்களுக்கு, அதாவது பிச்சை எடுப்பவர்களுக்கு நம்மால் முடிந்ததை செய்து விட வேண்டும். கோவிலை விட்டு வெளியே வரும் பொழுது செய்யக்கூடாது.