குடியரசு தின விழா! பொதுமக்களுக்கு தமிழக அரசு விடுத்த அன்பான வேண்டுகோள்!

Photo of author

By Sakthi

குடியரசு தின விழாவின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் ஆர்.என். ரவி இன்றைய தினம் காலை 8 மணி அளவில் தேசிய கொடியை ஏற்றி வைப்பார். ஒவ்வொரு வருடமும் குடியரசு தின நிகழ்ச்சியில் சுதந்திர போராட்ட தியாகிகளும், பொதுமக்களும், மாணவர்களும், பள்ளி குழந்தைகளும், பங்கேற்பது வழக்கம்.

நோய் தொற்று காரணமாக, நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் வைத்து இந்த வருடம் பள்ளி குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் நிகழ்த்தும் கலை நிகழ்ச்சிகள் தவிர்க்கப்படுகின்றன.

சுதந்திர போராட்ட வீரர்களின் வயது மூப்பை கருத்தில் வைத்து நோய்த்தொற்று பரவலை தவிர்க்கும் விதமாக மாவட்டம்தோறும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வீடுகளுக்கு சென்று அதிகாரிகள் மூலமாக பொன்னாடை அணிவித்து உரிய மரியாதை வழங்க மாவட்ட ஆட்சியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு இருக்கிறது.

குடியரசு தின விழா தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நேரடியாக ஒளிபரப்ப அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. கூட்டத்தை தவிர்க்கும் விதத்தில் இந்த வருடம் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள், பள்ளி குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள் உள்ளிட்டோர் விழாவை காண்பதற்கு நேரில் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். குடியரசு தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி மற்றும் வானொலியில் கண்டும், கேட்டும் மகிழுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று தமிழக அரசு சார்பாக வெளியிடப்பட்டு இருக்கின்ற செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.