ஆளுநர்களாகிய நாங்கள் அனைவரும் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்ட தான் நடந்து வருகிறோம்! ஆனால்….!

Photo of author

By Sakthi

மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் மாநிலத்தில் ஆளுநர்கள் நியமனம் செய்யப்பட்டால் அவர்களுடைய வேலை என்பது மிகவும் குறைவு. அதாவது மாநில சட்டசபையில் ஏதாவது ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டு அது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டால் அதற்கு ஒப்புதல் வழங்குவது, குடியரசு மற்றும் சுதந்திர தினங்களின் போது கொடி ஏற்றுவது இதுபோன்ற விஷயங்களோடு ஆளுநர்களின் வேலை முடிவடைந்து விடும்.

ஆனால் தற்போது ஆளுநர்கள் தன்னிச்சையாக சில செயல்பாடுகளை முன்னெடுப்பதால் இது மாநில அரசுகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி இருப்பதாக சொல்லப்படுகிறது.

குறிப்பாக புதுவையின் முன்னாள் ஆளுநர் கிரண்பேடி அங்கு எடுத்த பல நடவடிக்கைகள் அப்போதைய புதுவை மாநில காங்கிரஸ் அரசுக்கு மிகப்பெரிய தலைவலியாக இருந்தது.

ஆகவே அப்போதைய முதலமைச்சர் நாராயணசாமி புதுவை ஆளுநர் வரம்பு மீறி செயல்படுகிறார். அரசின் தனிப்பட்ட விவகாரங்களில் அவர் தலையிடுகிறார். இது முறையல்ல என்று பலமுறை கிரண்பேடிக்கு கண்டனம் தெரிவித்தார்.

சமீபத்தில் தமிழக ஆளுநராக உளவுத்துறையில் பணியாற்றிய ஆர்.என். ரவி நியமனம் செய்யப்பட்டார். அவருடைய நியமனத்திற்கு தமிழகத்தில் திமுக காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர். அதோடு ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்கள்.

சமீபத்தில் கூட தமிழக ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று தெரிவித்து டெல்லியில் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு மனு வழங்கினர்.

இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரத்தை தெரிந்து கொள்ளும் விதத்தில் சுற்றுலா நடைபெற்று வருகிறது அதன் ஒரு பகுதியாக மும்பையைச் சார்ந்த பள்ளி மாணவர்கள் புதுவைக்கு சுற்றுலா வந்தனர் அந்த மாணவர்களை புதுவையில் மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ராஜ் நிவாஸில் நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.

அப்போது கல்வி முறை போட்டி நிறைந்த உலகில் தங்களை தகுதிப்படுத்திக் கொள்ள வெற்றியாளர்களாக உருவாவதற்கான முயற்சி உள்ளிட்டவை தொடர்பாக புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மாணவர்களிடம் ஆலோசனை வழங்கியதாக சொல்லப்படுகிறது.

இதனை அடுத்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய தமிழிசை தற்போது இருக்கின்ற சூழ்நிலையில், மாணவர்கள் சந்திக்கும் சவால்கள் தொடர்பாக கேட்டறிந்ததாக தெரிவித்தார். அதோடு தன்னம்பிக்கை வளர்க்கும் விதத்தில் கருத்துக்களை தெரிவித்ததாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலையாளிகள் 6 பேர் விடுதலை செய்யப்படுகிறார்கள் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், ஆளுநர் எந்தவித முடிவும் எடுக்காமல் இருந்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த தமிழிசை ஆளுநரின் தாமதம் தான் 6 பேர் விடுதலைக்கு காரணம் என்று தெரிவிக்க முடியாது. ஆளுநர் முடிவெடுப்பதில் சில சவால்கள் இருந்திருக்கலாம்.

சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்யும்போது பல மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருந்து விடக்கூடாது என்றும், ஆளுநர் அதனை சவாலாக நினைத்திருக்கலாம். ஆளுநருக்கு முடிவெடுப்பதில் சில காரணங்கள் இருந்திருக்க கூடும் என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், அனைத்து ஆளுநர்களும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு சட்ட விதிகளுக்கு உட்பட்ட தான் நடந்து வருகிறோம். இதில் விதிமீறல்கள் எதுவும் இல்லை. ஆனால் இதில் சிறு, சிறு நடவடிக்கை கூட விமர்சனம் செய்யப்படுவதாக தெரிவித்தார்.

ஆளுநர்கள் தொடர்பாக அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருவதாகவும் கூறினார். ஆளுநர்கள் மக்களை சந்தித்தால் சிலருக்கு குளிர், ஜுரம் வந்து விடுவதாக தமிழக மற்றும் தெலுங்கானா மாநில அரசுகளை மறைமுகமாக விமர்சிக்கும் விதத்தில் தமிழிசை கிண்டலாக தெரிவித்திருக்கிறார்.