அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் பதவி பறிக்கப்பட்ட நிலையில், அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற அவரின் கருத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. அதே சமயம் அ.தி.மு.க பொதுச்செயலளார் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பும் பெருகி வருகிறது. எம்.ஜிஆர் காலம் முதல் இன்று வரை அறியப்பட்டு வரும் செங்கோட்டையனை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கியது அவரின் ஆதரவாளர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக எடப்பாடி பழனிசாமி தேனி அருகே சுற்று பயணம் மேற்கொண்டபோது அவரின் வாகனத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் “அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என்று கோஷமிட்டனர். இதனால் பிரச்சாரத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
செங்கோட்டையனின் பதவி பறிப்பு தொடர்பாக பேசிய ஓ.பன்னிர்செல்வம், செங்கோட்டையனை பொறுப்பில் இருந்து நீக்கியது சர்வாதிகாரத்தின் உச்சம் என்று கூறி இருக்கிறார். அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச்செயலளார் சசிகலா செங்கோட்டையனை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கியது “சிறுப்பிள்ளை தனமான செயல், இது கட்சியின் நலனுக்கு உகந்தது அல்ல”, ஒற்றுமையே கட்சி மீட்புக்கு வழிகாட்டும் என்றும் வலியுறுத்தினார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டி.டி.வி தினகரன் “கெடுவார் கேடு நினைப்பார் என்பது போல எடப்பாடி பழனிசாமியின் செயல் இருக்கிறது, செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கியது அவருக்கு பின்னடைவு இல்லை, அவரை நீக்கியவர்களுக்கு தான் பின்னடைவு என்று சாடியிருந்தார். இதனை தொடர்ந்து மயிலாடுதுறையில் அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு நன்றி தெரிவித்து அ.தி.மு.கவின் உரிமை மீட்பு குழு சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை உடைக்க பலர் செயல்பட்டு வருவதகவும், அ.தி.மு.க.வை எந்த கொம்பனாலும் உடைக்க முடியாது என்று ஆவேசமாக பேசியுள்ளார். செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது 2026 சட்டமன்ற தேர்தலில் பெரிய தாக்கத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.