ஆர்.எஸ்.பாரதி கைது எதிரொலி! அச்சத்தில் தயாநிதிமாறன் மற்றும் டி.ஆர்.பாலு

Photo of author

By Ammasi Manickam

திமுக அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதியை மத்திய குற்றப்பிரிவு காவல் துறை அதிகாரிகள் இன்று காலை திடீரென கைது செய்தனர். இந்நிலையில் திமுக எம்பிக்கள் தயாநிதிமாறன் மற்றும் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் அச்சத்தில் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

திமுக அமைப்பு செயலாளர் எஸ்.ஆர்.பாரதி மீது தாழ்த்தப்பட்ட மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு பின்னர் இடைக்கால ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் எஸ்.ஆர்.பாரதி கைது செய்யப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின்,திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் அதிமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் எஸ்.ஆர்.பாரதி கைதை தொடர்ந்து தாங்களும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு மற்றும் தயாநிதிமாறன் ஆகியோர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரியும், தங்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய கோரியும் மனு தாக்கல் செய்துள்ளனர்.

சமீபத்தில் தலைமை செயலாளரை திமுக எம்பிக்கள் சார்பாக சந்தித்த தயாநிதி மாறன் தாழ்த்தபட்ட மக்களை இழிவு செய்யும் வகையில் பேசினார். இந்நிலையில் சர்ச்சைக்குரிய வகையில் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அவரும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் முன்னெச்சரிக்கையாக மனு தாக்கல் செய்துள்ளனர்.

இன்று பிற்பகல் இந்த மனுவின் மீது நடைபெற்ற விசாரணையின் போது, திமுக எம்.பி.க்களான டிஆர் பாலு மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் மீது வரும் மே 29 ஆம் தேதி வரை காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கக்கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கின் விசாரணையையும் வரும் மே 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.