விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவரும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் மீது இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதே நேரத்தில் அவரை கைது செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளரும்,”உதயசூரியன்” சின்னத்தில் வெற்றி பெற்ற விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு துரை. ரவிக்குமார் அவர்கள், இணையவழி கருத்தரங்கத்தை நடத்த திட்டமிட்டுள்ளார்.
அதில் “தன்னாட்சி தமிழகம்” #UnitedStates of India # தன்னாட்சி நாள் செப்டம்பர் 13ஞாயிறு காலை 10 மணிக்கு ஜூம் முகவரியில் நடத்தினார். மேலும் செப்15 செவ்வாய் கிழமை டுவிட்டர் பரப்புரை செய்கிறார் என்று சமூக வலையதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இந்திய அரசியல் சாசனப்படி சத்திய பிரமாணம் செய்து பதவியேற்ற ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இதுபோன்று பிரிவினையை தூண்டும் வகையில் “தன்னாட்சி தமிழகம்” என்றும் ‘யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் இந்தியா” என்று பெயர் மாற்றம் செய்வது போல, கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசுவது பிரிவினை எண்ணத்தை பொதுவெளியில் விதைக்கும் செயல் ஆகும்.
பாராளுமன்ற உறுப்பினர் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு, ஜாதி மொழி ரீதியாக இது போன்ற பிரிவினையை தூண்டும் விதமாக தொடர்ந்து செயல்பட்டு வரும் துரை.ரவிக்குமாரை மதுரை மாவட்ட இந்து மக்கள்கட்சியின் சார்பில் வண்மையாக கண்டிக்கிறோம். இந்திய குடியரசுத் தலைவர், பாரதப் பிரதமர், மக்களவை சபாநாயகர் ஆகியோர் இவர் (துரை.ரவிக்குமார்) மீது இந்திய அரசியல் அமைப்பு சட்ட படி நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.பிரிவினைவாத தடைச் சட்டத்தின் கீழ் துரை.ரவிக்குமாரை கைது செய்ய வேண்டுகிறோம் என வலியுறுத்துகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக சட்டத்தை மதிக்காமல் நாட்டில் பிரிவினையை தூண்டும் வகையில் பேசிய ரவிக்குமார் எம்பி மீது முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படுமா என்று அக்கட்சியினர் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமையும் செய்வதறியாமல் அதிர்ச்சியடைந்துள்ளது.