திருப்பதியில் பவித்ர உற்சவம்! தேவஸ்தான அதிகாரிகளின் முக்கிய அறிவிப்பு!!

Photo of author

By Jeevitha

ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் திருப்பதி மாவட்டத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயம் திருமலை வெங்கடேஸ்வரா ஆலயமாகும்.

உற்சவங்களிலேயே சிறப்பான உற்சவமானது பவித்ர உற்சவம் ஆகும். இது திருப்பதி தேவஸ்தானத்தில் வருடந்தோறும்  நடைபெற்றுக்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பவித்ர உற்சவமானது வருகின்ற ஆகஸ்டு மாதம் 15,16 மற்றும் 17 ஆகிய மூன்று தேதிகளில் நடைபெறும்.

இந்த பவித்ர உற்சவம் நடைபெறும் மூன்று நாட்களிலும் காலை ஒன்பது மணி முதல் பதினொரு மணி வரையிலும் திருமஞ்சனம் திருக்கோவிலின் சம்பங்கி பிரகாரத்தில் நடைபெறும். மேலும் சுவாமி திருவீதி உலா நடைபெறும்போது பெருமாளுக்கான  சிறப்பு அலங்காரத்தில் மலையப்ப சாமி ஸ்ரீ தேவி பூதேவியுடன் வந்து பக்தர்களால் தரிசனம் செய்யப்படுவார்.

திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், பவித்ர உற்சவம் நடைபெறும் மூன்று நாட்களிலும் வழக்கமாக நடைபெறும் சேவைகளில் சில மாற்றங்களைத் தெரிவித்துள்ளனர். இது குறித்து திருமலை தேவஸ்தான அதிகாரிகளின் அறிவிப்பின் படி ஊஞ்சல் சேவை, சஹஸ்ர தீப அலங்கார சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் போன்ற சேவைகள் ரத்து செய்யப்பட்டது.

பல்லாயிரக்கணக்கான பக்தர்களால் நாள்தோறும் தரிசிக்கபட்டு வரும் திருமலை திருப்பதியில் பவித்ர உற்சவத்தினை முன்னிட்டு ஆகஸ்டு 15,17 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த திருப்பாவாடை மற்றும் கல்யாண உற்சவம் போன்ற சேவைகள் ரத்து  செய்யப்பட்டதாக தேவஸ்தான அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பவித்ர உற்சவத்தை முன்னிட்டு திருமலை திருப்பதி திருக்கோவிலில் ஆகஸ்டு மாதம் பதினான்காம் நாள் அங்குரார்ப்பணம் நடைபெற உள்ளது. இதற்கு அடுத்த நாள் பவித்ர மாலைகள் பிரதிஷ்டை  செய்யப்படும். ஆகஸ்டு 16 ஆம்  பிரதிஷ்டை செய்யப்பட்ட மாலைகள் சமர்ப்பணம் செய்யப்படும். இதனைத்தொடர்ந்து பவித்ர உற்சவம் நடைபெறும் மூன்றாம் நாளான 17 ஆம் நாள் யாகமானது பூர்ணாஹூதியுடன்  நிறைவடையும் என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.