நாய் மற்றும் பிற ஜீவன்களுக்கு உணவு அளிக்கும் முறை மற்றும் அதனால் ஏற்படக்கூடிய நன்மைகள்!!

Photo of author

By Janani

நாய் மற்றும் பிற ஜீவன்களுக்கு உணவு அளிக்கும் முறை மற்றும் அதனால் ஏற்படக்கூடிய நன்மைகள்!!

Janani

How to feed dogs and other animals and its benefits!!

நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களுக்கு புண்ணியம் தேடுகின்ற வழி தானம் தான் என்பதை நாம் அனைவரும் அறிவோம். குறிப்பாக வாயில்லா ஜீவன்களான பசு மாடு, நாய், காகம் போன்றவைகளுக்கு உணவளிப்பது புண்ணியத்தை தேடி தரும். ஆனால் இந்த ஜீவன்களுக்கு உணவளிக்கும் பொழுது நாம் முறையாகத்தான் கொடுக்கிறோமா என்பதை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப உணவளிப்பதன் மூலம் நாம் செய்த பாவம் மற்றும் நமது முன்னோர்கள் செய்த பாவம் அனைத்தும் நீங்கும்.
சில வீடுகளில் நாய்களைச் செல்லப் பிராணியாகவும், சில வீடுகளில் ஆன்மீக தோஷம் நீங்குவதற்காகவும் வளர்த்து வருகின்றனர். உங்கள் வீட்டில் வளர்க்கக்கூடிய நாய் உங்கள் வீட்டை பாதுகாக்கிறது எனவே அவைகளுக்கு உணவினை வழங்குகிறீர்கள். ஆனால் ஒருவேளை உணவு கூட கிடைக்காமல் தெரு நாய்கள் இருக்கும். அத்தகைய நாய்களுக்கு ஒரு வேளை உணவு அல்லது ஒரு ரொட்டி துண்டினையாவது வழங்கி பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டங்கள் தேடி வரும்.
ஜோதிடத்தின் படி நாய் பைரவரின் விலங்காக திகழ்கிறது. நாய்களுக்கு உணவளிப்பதால் உங்கள் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் நீங்கும். நீங்கள் செய்யும் செயல்களில் முன்னேற்றம் ஏற்படும். அதுமட்டுமின்றி உங்களின் மேல் உள்ள கண் திருஷ்டிகள் நீங்கும். தேய்பிறை அஷ்டமியில் நாய்களுக்கு உணவளிப்பது நல்ல பலன்களை தரும். இரவு நேரங்களில் நாய்களுக்கு அளிக்கக்கூடிய உணவில் சிறிதளவு வெல்லத்தினை சேர்த்து கொடுத்தால் முன்வினைகளில் நீங்கள் செய்த பாவங்கள் நீங்கும்.
நீங்கள் வளர்க்கக்கூடிய நாய்களுக்கு உணவளிப்பது என்பது உங்கள் கடமை. எனவே மேற்கூறிய பலன்கள் எதுவும் கிடைக்காது. ஒருவேளை உணவு கூட கிடைக்காத தெரு நாய்களுக்கு உணவளிப்பதன் மூலமே இத்தகைய பலன்களை பெற முடியும். அதுவும் இரவு நேரங்களில் உணவு அளிப்பது மிகவும் சிறந்தது. ஒருவேளை உணவினை நாய்களுக்கு வழங்கினால் அது உங்கள் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டு இருக்கும்.
அதே சமயம் தெரு நாய்களிடம் சற்று கவனமாகவும் இருக்க வேண்டும். சிறு குழந்தைகளை நாய்களிடம் விடக்கூடாது. கடவுளின் விலங்காக இருப்பதால் நீங்கள் தானம் செய்யும் பொழுது அசைவ உணவினை வழங்காமல் சைவ உணவுகளை வழங்குவது நல்லது.
பசு மாட்டிற்கு வாழைப்பழம் வாங்கி கொடுக்கலாம் என்பதை நாம் அறிந்திருப்போம். ஆனால் நாட்டு வாழைப்பழம் ஆறு என்ற கணக்கில் வாரம் ஒருமுறை வழங்கி வந்தால் மேலும் சிறப்பை தரும். எறும்புகளுக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காகத்தான் காலை வேளையில் அரிசி மாவில் கோலம் போட வேண்டும் என்று நமது முன்னோர்கள் கூறியிருந்தனர். அதே அரிசி மாவில் சிறிதளவு மஞ்சள் தூளை கலந்து போடுவது மேலும் பலனை தரும் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. காகங்களுக்கு நாம் வைக்கக்கூடிய உணவில் சிறிதளவு தயிர் மற்றும் எள்ளினை கலந்து வைப்பது நமது முன்னோர்களின் ஆத்மாக்களை சாந்தி அடைய வைத்து அவர்களின் ஆசியை நமக்கு பெற்று தரும்.
இந்த ஜீவன்களுக்கு நீங்கள் ஏற்கனவே உணவினை வழங்கி வந்தாலும் கூட இந்த முறையில் உணவினை வழங்கி பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மென்மேலும் வளர்ச்சியினை காண்பீர்கள்.