எக்சிட் ஆனவர்கள் எப்படி ரீ-என்ட்ரி கொடுப்பார்கள்! சசிகலா குறித்து முன்னாள் அமைச்சர் பேட்டி!
அதிமுக கட்சியில் ரீஎன்ட்ரி கொடுப்பேன் என்று சசிகலா அவர்கள் கூறியதை அடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் எக்சிட் ஆனவர்கள் எப்படி ரீ-என்ட்ரி கொடுப்பார்கள் என்று கூறியுள்ளார்.
இன்று(ஜூன்17) சென்னை பட்டினப்பாக்கத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவய்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது அவர் “விக்கிரவாண்டி இடைத் தேர்தலை அதிமுக கட்சி புறக்கணித்தது குறித்து திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி அவர்கள் விமர்சனம் செய்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் திமுக கட்சி மக்களை பட்டியில் இட்டு அடைத்தது போல அடைத்து ஜனநாயக படுகொலை செய்தது.
தேர்தல் ஆணையம் நேர்மையான தேர்தலை நடத்த வேண்டும். நேர்மையான தேர்தல் நடைபெற்றால் தேர்தலில் போட்டியிடுவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். தேர்தல் ஆணையத்தினால் தேர்தலை நேர்மையான முறையில் நடத்துவோம் என்று உறுதி அளிக்க முடியுமா? அதனால் தான் நாங்கள் இடைத் தேர்தலை புறக்கணித்தோம். அதிமுக கட்சி எப்பொழுதும் புறமுதுகை காட்டுவதில்லை. எப்பொழுதும் அதிமுக கட்சிக்கு வெற்றி மட்டுமே கிடைக்கும்.
இந்த இடைத் தேர்தலில் அரசு இயந்திரத்தை முடுக்கி விடும். பின்னர் ஸ்டாலின் தலைமையிலான அனைத்து அமைச்சர்களும் விக்கிரவாண்டி தொகுதியில் முகாமிடுவார்கள். அவர்கள் அனைவரும் பணபலம், ஆட்பலம், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றை பயன்படுத்துவார்கள்.
இதனால் இந்த தேர்தலில் அதிமுக கட்சி போட்டியிடுவதால் அதிமுக கட்சிக்கு பணம், நேரம், உழைப்பு அனைத்துமே வீண் தான். அநியாயம், அராஜகம், அக்கிரமம் ஆகியவை தலை தூக்கும். அதனால் நாங்கள் தேர்தல் புறக்கணிப்பு முடிவை மேற்கொண்டோம்.
சசிகலா அவர்களும் அவருடைய குடும்பமும் ஜெயலலிதா அவர்களால் வெளியேற்றப்பட்டவர்கள். ஆனால் ஜெயலலிதா அவர்கள் மீண்டும் சசிகலா அவர்களை மட்டும் சேர்த்துக் கொண்டார். சசிகலா அவர்கள் கட்சியிலும் இல்லை. தொண்டர்களாலும் அவர் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அப்படி இருக்க மக்கள் எவ்வாறு அவரை ஏற்றுக் கொள்வார்கள். எக்சிட் ஆனவர்கள் எவ்வாறு ரீ என்ட்ரி கொடுக்க முடியும்? மேலும் தமிழகத்தில் பாஜக கட்சிக்கு இடமும் இல்லை” என்று கூறினார்.